
சாதத்திற்கோ அல்லது சப்பாத்திக்கோ எப்பவும் ஒரே குழம்பு கிரேவிதானா எனக் கேட்பவர்களுக்காக சில குழம்பு கிரேவி வகைகளை இங்கே பார்க்கலாம்.
ஆலு மட்டர்
தேவை:
உருளைக்கிழங்கு - 4
பச்சைப்பட்டாணி - 1 கப்
தக்காளி- 4
கெட்டித்தயிர் - 1 கப்
வேர்க்கடலை- சிறிய கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 2 டீஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோலை உரித்து ஆறியதும் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைப்பட்டாணியை உரித்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளியை நன்கு வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு பட்டாணிகளைப் போட்டு தேவையான உப்பையும் சேர்த்து எல்லாம் ஒன்று சேர்ந்து வாசனை வரும் வரை வேகவைத்து கடைசியாக கடைந்த தயிர் ஊற்றி இரண்டு கொதி வந்தவுடன் பொடித்த வேர்க்கடலை சேர்த்து இறக்கி வைக்கவும். இது வாசனையுடன் குழம்பு ரசத்துக்கு மாற்றாக சாதம் சப்பாத்தியில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
கருப்பு மொச்சை பயிர் குழம்பு
தேவை:
கறுப்பு மொச்சை - சிறிய கப்
கத்தரிக்காய் - 4
சின்னவெங்காயம் -10
பூண்டு - 2 பற்கள்
புளி - தேவைக்கு
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன் அல்லது
பட்டை சோம்பு - சிறிது
தேங்காய்- சிறிய கப்
எண்ணெய் - தாளிக்க
உப்பு – தேவைக்கு
செய்முறை:
கருப்பு மொச்சையை கழுவி ஊறவைத்து குக்கரில் அரைமணி நேரம் வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் தண்ணீரை வடித்து விட்டு வேற தண்ணீர் சேர்த்து வேகவைத்திருக்கும் மொச்சை பயிற்றுடன் கலந்து நறுக்கிய காய்கறிகள், சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து திரும்ப குக்கரை அடுப்பில் வைத்து ஒரு விசில் விட்டு வேகவைக்கவும். வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை வெங்காயம் போட்டு நன்கு வதக்கி தேவையான புளிக்கரைசலில் சீரகம் அல்லது பட்டை சோம்பு தேங்காய் அரைத்து கலந்து ஊற்றி கொதித்து குழம்பு எல்லாம் சேர்ந்து வந்ததும் சிட்டிகை பெருங்காயம் கலந்து இறக்கி வைக்கவும்.
பீர்க்கங்காய் கிரேவி
தேவை:
பீர்க்கங்காய் - 2
உருளைக்கிழங்கு- 1
சின்னவெங்காயம் -10
தக்காளி- 2
தேங்காய் துருவல் - தேவைக்கு மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
இளசான பீர்க்கங்காய்களை கழுவி தோலுடன் பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்குகளை வேகவைத்து தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். தக்காளி மற்றும் நறுக்கிய பீர்க்கங்காயுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் இரண்டாகப் பிளந்த சின்ன வெங்காயம், கருவேப்பிலை தாளித்து தக்காளி பீர்க்கங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும் இத்துடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்தூள் சேர்த்து மசித்த உருளைக்கிழங்கு, மல்லித்தூள் சேர்த்து வதக்கி சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும் இந்த கிரேவி சப்பாத்தி, சாதத்துக்கு சூப்பராக இருக்கும்.