
எந்தக் கீரையாக இருந்தாலும் கீரையை முதலில் தண்ணீரில் நன்றாக அலசிவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் அதில் உள்ள அழுக்கு, மண் துகள்கள் போன்றவை நீங்கி சுத்தமாகும். கீரையை இரண்டு முறை நன்கு அலசியே பயன்படுத்த வேண்டும்.
கீரையைப் பொறுத்தவரை நறுக்கிய உடனேயே சமைத்துவிட வேண்டும். அப்போதுதான் அதனுடைய இயல்பு மாறாமல் இருக்கும். நறுக்கி வைத்து அடுத்தநாள் சமைப்பது எல்லாம் அதிலுள்ள சத்துக்களை விரயமாக செய்யும்.
கீரையை நறுக்கிய பின்பு நீரில் அலசக்கூடாது. அதிலுள்ள கரையும் விட்டமின்கள் வெளியேறிவிடும். எனவே கீரையை முதலில் நன்கு அலம்பி பிறகே நறுக்கவேண்டும்.
கீரையை சமைக்கும்பொழுது குறைந்த நீரில், குறைந்த தீயில் சமைக்க வேண்டும். கீரையை வேகவைக்கும் பொழுது தட்டை போட்டு மூடி வைத்து வேகவைக்க கூடாது. அப்படி செய்வதால் கீரையின் பச்சை நிறம் மாறி பழுப்பு கலரில் ஆகிவிடும். எனவே கீரையை திறந்து வைத்தே வேக விடவேண்டும்.
தண்ணீரில் கரையும் விட்டமின்கள் கீரையில் நிறைய உள்ளன. எனவே கீரை சமைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப்பாகவோ, ரசமாகவோ பயன்படுத்தலாம். அல்லது சிறிது உப்பும் தயிரும் கலந்து பருகலாம்.
கீரையை சமைக்கும்போது அதனுடன் சமையல் சோடாவை சிறிதும் சேர்க்கக்கூடாது. இது கீரையின் தன்மையை மாற்றி, அதனுடைய நல்ல இயல்புகளையும் கெடுத்துவிடும்.
கீரையில் நிறைய வகைகள் உள்ளன. நாம் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கீரைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். அதிலும் ஒரு சில கீரைகளை நோய் வந்தால்தான் பயன்படுத்த வேண்டும் என்று தவறாக எண்ணி சாப்பிடுவதில்லை.
அனைத்து கீரைகளிலுமே உடம்புக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. விதவிதமான கீரைகளை வாரத்திற்கு மூன்று நாட்களாவது சமைத்து சாப்பிட எல்லா வகையான சத்துக்களையும் பெறலாம்.
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, மூக்கிரட்டை, துத்தி, புளியாரை, சோம்புக் கீரை, தூதுவளை, தவசிக் கீரை, கல்யாண முருங்கை, சுக்கான் கீரை, குத்துப் பசலை, கொடி பசலை, மணத்தக்காளி கீரை, சிறுகீரை, அரைக்கீரை, முளைக் கீரை, பருப்பு கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை என கீரைகளில் எத்தனையோ வகைகள் உள்ளன. அனைத்து கீரைகளிலும் விட்டமின் ஏ சத்து நிரம்பியுள்ளது.
நார்ச்சத்தும் குளிர்ச்சியும் நிரம்பிய கீரைகளை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை செரிமானமாவதில் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
கீரையை தயிருடன் சேர்த்து உண்ணும்பொழுது குளிர்ச்சி அதிகமாகி அஜீரணம் ஏற்படலாம். பொதுவாகவே கீரை வகைகளை பகலில் உண்பதே சிறந்தது.
கீரையுடன் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை சேர்த்து சமைப்பதை தவிர்க்கவும்.
கீரை சமைக்கும் பொழுது காரத்திற்கு மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து சமைப்பது மருத்துவ பலனை அதிகரிக்கும்.
கீரைகளை பொரியலாகவோ, பருப்பு சேர்த்து கூட்டு வகைகளாகவோ, கீரை கடையலாகவோ, மசியலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிடலாம். கீரை சாதம் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
சீமை பொன்னாங்கண்ணி, நாட்டு பொன்னாங்கண்ணிக் கீரைகள் பார்வை குறைபாட்டை தவிர்க்க உதவும். இதனை வாரத்திற்கு இரண்டு நாட்களாவது சமைத்து உண்ணலாம்.
உடலின் கழிவுகளை வெளியேற்ற உதவும் மூக்கிரட்டை கீரையை பொரியலாகவோ, பருப்பு சேர்த்து கடைந்தோ சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும்.