
1) சாஃப்ட் ரொட்டி:
மைதா- 2 கப்
பால்- 1/2 கப்
வெதுவெதுப்பான தண்ணீர்- 1/4 கப்
ஈஸ்ட்- 1ஸ்பூன்
சர்க்கரை- 1/2 ஸ்பூன்
ஆலிவ் ஆயில்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையானது
வெண்ணெய்- 2 ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிது
சில்லி ஃப்ளேக்ஸ்- 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, ஈஸ்ட் எல்லாவற்றையும் சேர்த்து கால் கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்த்து பிசையவும். ஆலிவ் ஆயில் 2 ஸ்பூன் (ஆலிவ் ஆயில் இல்லையென்றால் சாதாரண மணமில்லாத ரீஃபைன்ட் எண்ணெயை சேர்க்கலாம்) சேர்த்து நன்கு இழுத்து பிசைந்து தட்டைப் போட்டு மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும். நன்கு உப்பி வந்ததும் திரும்பவும் எடுத்து நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். இதனை மாவில் பிரட்டி ரொட்டிகளாக இடவும்.
ஒரு கிண்ணத்தில் வெண்ணை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சில்லி ஃபிளேக்ஸ் மூன்றையும் நன்கு கலந்து வைக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டிகளைப் போட்டு இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுக்கவும். நன்கு உப்பி வரும். ரொட்டியின் மேல் வெண்ணை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சில்லி ஃப்ளேக்ஸ் கலந்த கலவையைத் தடவும். மிகவும் மணமான, ருசியான ரொட்டி தயார்.
2) சீனிக்கிழங்கு கீரை சால்னா:
சக்கரைவள்ளி கிழங்கு- ஒரு கப்
முளைக்கீரை- 1 கப்
பயத்தம் பருப்பு- 1/4 கப்
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
கரம் மசாலா- ஒரு ஸ்பூன்
காரப்பொடி- 1 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை
அரைக்க:
தேங்காய் 2 ஸ்பூன், முந்திரி பருப்பு 6
செய்முறை:
கீரையுடன் பயத்தம் பருப்பை சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி நறுக்கி தனியாக வேக வைக்கவும். குக்கரில் பருப்புடன் சேர்த்து வேக வைத்தால் குழைந்து விடும்.
முந்திரிப் பருப்பையும், தேங்காயையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு வறுக்கவும். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தனியாத் தூள், கரம் மசாலா, காரப்பொடி சேர்த்து வதக்கி வெந்த கீரை, பயத்தம் பருப்பு கலவையில் கொட்டவும். வேக வைத்த சக்கரைவள்ளிக் கிழங்கையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். கடைசியில் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும். மிகவும் ருசியான கிரேவி தயார்.
3) பிரட் மசாலா பணியாரம்:
பிரட் ஸ்லைசுகள்- 10
தயிர்- 1/2 கப்
வெங்காயம்- 1
கோஸ்- 1/4 கப்
கேரட்- 1
பச்சை மிளகாய்- 2
இஞ்சி- சிறு துண்டு
கறிவேப்பிலை- சிறிது
கொத்தமல்லி- சிறிது
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு
செய்முறை:
பிரட் ஸ்லைசுகளை துண்டுகளாகி மிக்ஸியில் தயிருடன் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதில் பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பை சேர்த்து கடுகு பொரிந்ததும் அதனையும் மாவில் கொட்டிக் கலந்து பணியார கல்லில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை விடவும். இருபுறமும் நன்கு சிவந்ததும் எடுத்துவிட மிகவும் ருசியான பிரட் பணியாரம் தயார்.