
அவல் ஊத்தப்பம்
தேவை:
கெட்டி அவல்- 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சரிசி - 2 கப்
புளித்த மோர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசி, அவல் இரண்டையும் தண்ணீரில் நன்கு ஊற வைத்து அரைக்கவும். அதை புளித்த மோரில் கரைத்து உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். ஒரு மணிநேரம் கழித்து, தோசைக் கல்லில் எண்ணெய்விட்டு, மாவை ஊத்தப்பமாக வார்க்கவும். இதற்கு உளுத்தம் பருப்பு தேவை இல்லை. சுவையாகவும் இருக்கும்.
வெல்ல பாதுஷா
தேவை:
மைதா மாவு - 2 கப்
கெட்டி நெய் - 2 ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 2 கப்
நெய் - பொரித்து எடுக்க
உப்பு - ஒரு சிட்டிகை
வெதுவெதுப்பான பசும்பால் - ஒரு கப்
செய்முறை:
கெட்டி நெய், வெதுவெதுப்பான பசும்பால், உப்பு இவற்றை கலந்து, நுரை வரும் வரை தேய்த்து, மைதா மாவை அதில் சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு பிசையவும். வடைபோல் தட்டி, காய்ந்த நெய்யில் பொரித்து எடுக்கவும். அவற்றின் மேல் சூடு ஆறும் முன், பொடித்த வெல்லத்தை பரவலாக தூவி பரப்பவும். புதுமையான, சுலபமான வெல்ல பாதுஷா தயார்.
தோசை டிப்ஸ் சில…
தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்தால் தோசை சுவை கூடி, மணமாகவும் இருக்கும்.
தோசை மாவில் சிறிது நல்லெண்ணெய் கலந்து விட்டால், தோசை மணமாக இருக்கும். தோசைக் கல்லில் இருந்து தோசையும் எளிதாக வந்துவிடும்.
சப்பாத்தி செய்த தவாவில், தோசை வார்த்தால் ஒட்டிக்கொண்டு எடுப்பது சிரமம். எனவே தோசைக்கு தனியாகவும், சப்பாத்திக்கு தனியாகவும், தவா வைத்துக் கொள்வது நல்லது.
தோசை மாவு மிஞ்சிப்போனால், ஹாட் பாக்ஸில் வைத்துவிட்டால், நீண்ட நேரம் புளிக்காமல் அதே பக்குவத்தில் இருக்கும்.
தோசைக்கு அரைக்கும்போது, சிறிது துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்தால், தோசை மொறு மொறு என்று இருக்கும்.
தோசைமாவு புளிக்காவிட்டால், அதில் சிறிது தக்காளிசாறு அல்லது புளித்த மோர் கலந்தால், மாவு புளித்து சுவையாகிவிடும்.
தோசை மாவு அரைக்கும்போது சில வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால், தோசை மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
தோசை மாவு அதிகம் புளித்துவிட்டால், அதை சிறிது சர்க்கரை கலந்தால், புளிப்பும் குறையும். மொறுமொறுப்பும் அதிகரிக்கும்.
தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்க, ஒரு பச்சை மிளகாயை கீறி அதில் போட்டு வைத்தால் போதும். பச்சை மிளகாய் மணமும் சேரும்.
தோசைக்கல் மிகவும் சூடாகிவிட்டால், சரியாக தோசை எடுக்க வராது. இதனால் சிறிது நீரை கல்லில் தெளித்துவிட்டு, இரவு வார்த்தால் தோசை சரியாக வரும்.
தோசை மாவு நீர்த்துப் போயிருந்தால், அதில் சிறகு வறுத்த ரவை கலந்து, சில நிமிடங்களுக்கு பிறகு, தோசை வார்த்தால், மாவு தோசை, ரவா தோசை ஆகிவிடும்.