மக்களின் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் எளிதான முறையில் தயாரிக்கக்கூடிய உணவுகள் மிகவும் பிரபலமாக உள்ளன. அப்படி அனைவரும் விரும்பும் வகையில் தயாரிக்கக்கூடிய ஒரு உணவுதான் பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு சுவையான மாலை சிற்றுண்டி. இந்த ரெசிபியில், பேபி கார்ன் பல மசாலா பொருட்களுடன் சேர்த்து சுவையாக தயாரிக்கப்படுகிறது. இதை சாதம், இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட சூப்பர் சுவையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 200 கிராம்
கடலை மாவு - 2 தேக்கரண்டி
மைதா மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 (சிறியது), நறுக்கியது
பூண்டு - 5, நறுக்கியது
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
உப்பு
கொத்தமல்லி தழை
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பேபி கார்ன்களை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு கிண்ணத்தில் பேபிகார்ன், கடலை மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேபி கார்ன் கலவையை ஒட்டும் அளவுக்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதைகள் சேர்த்து தாலிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.
பின்னர் மாவுடன் கலந்து வைத்திருக்கும் பேபி கார்ன்களை சேர்த்து நன்றாகக் கிளறி அவை மென்மையாகும் வரை நன்கு வதக்குங்கள். இறுதியில், கொத்தமல்லித் தழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், சூப்பரான சுவையில் பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை தயார்.
இந்த சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை எளிதாக தயாரிக்கக்கூடிய சுவையான உணவாகும். இதை வீட்டிலேயே எளிதாகத் தயாரித்து குடும்பத்தினருடன் சேர்ந்து ருசித்து மகிழுங்கள்.