பேச்சிலர்களே கவனியுங்கள்! இனி சமையல் உங்களுக்கு ஒரு பிரச்னையே இல்லை!

Home cooking foods
Attention, bachelors!
Published on

வேலை மற்றும் படிப்பு காரணமாக வெளியூரில் வசிக்கும் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் பலருக்கு வீட்டு சாப்பாடு கிடைக்காதது ஒரு பிரச்னையாகதான் இருக்கும். என்னதான் ஹோட்டலில் சாப்பிட்டாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடுபோல் வராது இல்லையா?

பொதுவாக பேச்சிலர்கள் சமையல் அறையில் அதிக நேரம் செலவிட விரும்ப மாட்டார்கள். விரைவாகவும் சுலபமாகவும், அதே சமயம் ஆரோக்கியமான உணவாகவும் சமைப்பதற்கான எளிய சமையல் குறிப்புகள் நிறைய உள்ளன. அதற்கு கற்பனை குதிரையை சிறிது தட்டிவிட்டால் போதும் விதவிதமாக செய்து ருசிக்கலாம்.

அதிக வேலை வைக்காத குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சமையல் வகைகளை முயற்சி செய்யலாம்.

சமைக்கும்பொழுது அதிக மசாலாக்களை தவிர்த்து ஆரோக்கியமான முறையில் காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்தி சமைக்கலாம்.

அரைக்க வேண்டிய அவசியம் இல்லாத சமையல் குறிப்புகளை தேர்ந்தெடுத்து சமைக்கலாம்.

இன்ஸ்டன்ட் தொக்கு, ஊறுகாய், பொடி வகைகளை வாங்கி வைத்துக் கொண்டால், வெறும் சாதம் மட்டும் வடித்துக் கொண்டு சமாளிக்கலாம். சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு பருப்புப் பொடி, தேங்காய் பொடி, பூண்டு பொடி என்று வெரைட்டியாக சாப்பிடலாம்.

குக்கரில் சாதம் வைக்கும்பொழுதே மேலே ஒரு கிண்ணத்தில் பருப்பும் காய்கறியும் சேர்த்து வேகவைத்துவிட்டால் போதும். இறக்கி மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட சாதத்திற்கு சூப்பரான சைட் டிஷ் தயார்.

ஆனியன் ரவா தோசை:

இந்த தோசைக்கு ஊறவைக்க வேண்டாம்; அரைக்க வேண்டாம். எளிதாக செய்துவிடலாம். ஒரு கப் ரவைக்கு அரை கப் அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், 1 ஸ்பூன் முழு மிளகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து சற்று நீர்க்க கரைத்துக் கொண்டு சூடான தோசை கல்லில் ஊற்றி நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் முறுகலாக ஆனதும் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

இன்னொரு முறையில் தோசைக் கல்லில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைத் தூவி, அதன் மேல் கரைத்த மாவை விட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வார்த்தெடுக்க வெங்காயம் தோசையிலிருந்து உதிராமல் இருக்கும்.

உடனடி தோசை (instant dosa):

கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் அரிசி மாவை ஒரு கப் எடுத்து அத்துடன் கோதுமை மாவு 1/2 கப், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்து தோசை கல்லில் ஊற்றி இரண்டு பக்கமும் நல்லெண்ணெய் விட்டு எடுக்க முறுகலான தோசை தயார்.

டிரை ஃப்ரூட்ஸ் தோசை:

இதனையே வித்தியாசமான முறையில் டிரை ஃப்ரூட்ஸ் கொண்டு சுவையான தோசை தயாரிக்கலாம். சிறிது கற்பனை குதிரையை தட்டி விட்டால் போதும் விதவிதமாக செய்து அசத்தலாம்.

ஒன் பாட் சமையலாக சாம்பார் சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம் போன்றவற்றை விரைவாகவும் எளிதாகவும் செய்யலாம்.

பீட்சா சாண்ட்விச், ஆலு சாண்ட்விச், சாக்லேட் சாண்ட்விச், பிரெட் உப்புமா என செய்து அசத்தலாம். குறைவான நேரத்தில் வயிற்றுக்கு நிறைவான உணவாக இருக்கும்.

சாண்ட்விச்:

பிரெட்டை சிறிது நெய் விட்டு ரோஸ்ட் செய்து, தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொண்டு இரண்டு பிரெட்டுக்கு இடையில் வைத்து சாஸ் அல்லது ஜாம் தொட்டு சாப்பிடலாம்.

லெமன் அவல், புளி அவல் உப்புமா, தயிர் அவல் என அவலில் வெரைட்டி காட்டலாம். இரண்டே நிமிடத்தில் செய்து விடக் கூடிய ரெசிபிக்கள் இவை. அவலை ஊற வைத்து பிழிந்தெடுத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து ஊறிய அவலைப் போட்டு அடுப்பை அணைத்துவிட்டு தேவையான உப்பு, எலுமிச்சை சாறு கலந்துவிட லெமன் அவல் தயார்.

புளி அவலுக்கு புளி பேஸ்டை உபயோகிக்கலாம். தயிர் அவலுக்கு ஊறிய அவலுடன் அதிகம் புளிப்பு இல்லாத தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தூவி, கடுகு தாளித்துக் கொட்ட தயிர் அவல் தயார். இரண்டே நிமிடத்தில் தயாராகும் அவல் ரெசிப்பீக்கள். செய்வதும் எளிது சத்தானதும் கூட.

இதையும் படியுங்கள்:
சமையலில் நேரத்தை மிச்சப்படுத்தணுமா? இதோ சில எளிமையான வீட்டுக்குறிப்புகள்!
Home cooking foods

இன்ஸ்டன்ட் ரசம்:

தக்காளி, பொடித்த மிளகு, சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, இறக்கும் சமயம் கடுகு, கறிவேப்பிலையை நெய்யில் தாளித்துக்கொட்டி அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து விட சூப்பரான இன்ஸ்டன்ட் ரசம் தயார். சூடான சாதத்தில் பிசைந்து சிப்ஸ் தொட்டு சாப்பிடலாம்.

கலந்த சாதங்கள் செய்வதற்கு அதிக சிரமப்பட வேண்டியதில்லை. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம், மிக்சட் வெஜிடபிள் சாதம், வெஜிடபிள் பிரியாணி, ஜீரா ரைஸ், மாங்காய் சாதம் என வெரைட்டி காட்டலாம். தொட்டுக்கொள்ள ராய்தா பொருத்தமாக இருக்கும்.

எந்த கலந்த சாதத்திற்குமே அதிக மெனக்கிடல் தேவையில்லை. தேங்காய் துருவலை கடுகு தாளித்ததும் பச்சை மிளகாயுடன் சேர்த்து கறிவேப்பிலை போட்டு சில நிமிடங்கள் வதக்கி சாதம் சேர்த்து கலக்க தேங்காய் சாதம் தயார். அதுபோல்தான் மற்ற கலந்த சாத வகைகளும். இவற்றிற்கு தொட்டுக்கொள்ள சிப்ஸ் அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கிருஷ்ண ஜெயந்திக்கு சத்தான 'பாதாம் பிசின் லட்டு' செய்து அசத்துங்க!
Home cooking foods

சுண்டல் வகைகள்:

விருப்பமான சுண்டல் வகைகளை தேர்ந்தெடுத்து தினம் ஒன்றாக செய்து சாப்பிடலாம். பயத்தம்பருப்பு, வேர்க்கடலை, இனிப்புச் சோளம், கடலைப்பருப்பு போன்ற சுண்டல்கள் செய்வதற்கு 8 மணி நேரம் ஊறவைக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக செய்துவிடலாம்.

உருளைக்கிழங்கை சாதம் வைக்கும்போதே குக்கரில் வேகவிட்டு, தோல் உரித்து, உப்பு, காரம் சேர்த்து பிசிறி வைக்கவும். வாணலியில் கடுகு, கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கு மசாலாவை சேர்த்து கிளறி இறக்க சூப்பரான பொறியல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com