
கடுகு, மிளகு, சீரகம் வெந்தயம், புளி, இஞ்சி போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்தி வருகிறோம். என்றாலும், தாளிப்பு பொருட்களான கடுகு, மிளகு, சீரகம் இவற்றை உண்டு இவைகளின் மூலம் கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
கரிமஞ்சள்:
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளினால் ஜலதோஷம், தலைவலி, கடி விஷம் நீங்குவதுடன் பசியை அதிகப்படுத்தும். ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூளை கொதிக்கின்ற பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை அல்லது தேன் கலந்து தினமும் இருவேளை வெறும் வயிற்றில் குடித்துவர கபம், இருமல், சளி, ஆஸ்துமா தொல்லைகள் நீங்கும்.
கால் டீஸ்பூன் மஞ்சள் தூளை மோர் அல்லது நீரில் கலந்து குடிக்க தீவிரமான வயிற்றுப்போக்கு குறையும். மஞ்சளை வேப்பிலைடன் சேர்த்து அரைத்து சேற்று புண்ணுக்குப்போட புண் ஆறும். மஞ்சள் உண்பதனால் மஞ்சள் காமாலை ஏற்படும் என்பது தவறான நம்பிக்கை.
கடுகு:
கடுகை பொதுவாக நாம் தாளிப்பதற்கு பயன் படுத்துகிறோம். இது ஜீரணத்திற்கு துணை நிற்கிறது. ஒரு பிடி கடுகை சுத்தமான நீரில் அரைத்து 3 லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து இறக்கி இந்நீரை ஒரு பேசினில் ஊற்றி பொறுக்கும் படியான சூட்டில் இரு கால் பாதங்களையும் அதில் படும்படியாக 10 நிமிடம் வைத்திருக்கவும். இதனால் தூக்கமின்மை, சன்னி ,மனசோர்வு பயம், படபடப்பு, சித்தப்பிரமை, மன குழப்பம் முதலியன நீங்கும்.
மிளகு:
நாம் பயன்படுத்தும் மசாலா பொருட்களின் மிக மிகப் பழமையானதும் முதன்மையானதும் மிளகாகும். இது நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுத்தன்மையை மாற்றிவிடும். கால் டீஸ்பூன் மிளகுத்தூளை வறுத்து அரைத்து ஒரு டம்ளர் நீர் மோருடன் கலந்து குடிக்க வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம் செரியாமை முதலியன நீங்கும். மிளகு சீரகம் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
மிளகையும் கல் உப்பையும் சேர்த்து தூளாக்கி பற்களின் மேல் தடவ பல்லீறு ரணம், பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், பற்கூச்சம் போன்றவற்றிற்கு பயன்படுத்தி வர சிறந்த பலன் கிடைக்கும். ஆறுமிளகும், நாலு பாதம் பருப்பும் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் அருந்தி வரும்போது நரம்புகள் வலுப்பெறும். ஆறு மிளகை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவைத்து பாதியாய் சுண்டியதும் குடிக்க காய்ச்சல் குறையும்.
சீரகம்:
சிறு குழந்தை இல்லாத வீடும் சீரகம் இல்லாத உணவும் சிறக்காது என்பது பழமொழி. ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து இத்துடன் கொத்துமல்லி கீரையின் சாறு ஒரு டீஸ்பூன் சிறிதளவு உப்பு சேர்த்து தினம் காலை, இரவு உணவுக்கு பின்னால் அருந்தி வர செரியாமை, வாந்தி, பேதி நீங்கி சீரன சக்தி அதிகரிக்கும்.
சாதாரணமாக நாம் குடிக்கும் நீரிலேயே சிறிதளவு சீரகத்தை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிக்க சளி ,காய்ச்சல், இருமல், பித்தம், ஒவ்வாமை முதலிய அனைத்தும் நீங்கும். கருத்த பெண்கள் இந்த கசாயத்தை தேன் கலந்து போன்றுடன் சேர்த்து தினம் ஒரு வேளை அருந்தி வர கரு நன்கு வளரும் பிரசவம் சுபம் தாய்ப்பால் பெருகும்.
வெந்தயம்:
ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து சிறிது உப்பும் சோம்பும் சேர்த்து அரைத்து உள்ளுக்கு கொடுத்து வர வயிற்றுப்போக்கு நிற்கும்.
சாதாரணமாக தாளிக்கும் பொருட்களில் எவ்வளவு பயன் இருக்கின்றது என்பதை தெரிந்துகொண்டு சமைத்தால் வைத்தியரிடம் கொடுக்கும் பணத்தை வாணிபரிடம் கொடுப்பது நல்லது என்பதை உணரவைக்கும்.