
வாழைத்தண்டுப் பொரியல் செய்யும்போது ஒரு ஸ்பூன் பச்சரிசி, ஒரு ஸ்பூன் உளுந்து, நான்கு மிளகு, ஒரு மிளகாய் வற்றலை வறுத்துப் பொடி செய்து தூவிக்கிளறினால் சுவையும், மணமும் சூப்பராக இருக்கும்.
முதல்நாள் அரைத்து வைத்த தோசை மாவில் இரண்டு கரண்டிமாவு, சிறிதளவு சமையல் சோடா, கடலை மாவு, சிறிதளவு அரிசிமாவு சேர்த்துக் கலந்து பஜ்ஜி செய்தால் மொறு மொறுவென்று இருக்கும்.
பாகற்காயைப் பொடியாக நறுக்கி வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கி பொரியல் செய்தால் கசப்பு இருக்காது.
மோர்க்குழம்பு திக்காக வர, முதலில் மோர் தண்ணீராக இருக்கக் கூடாது. மல்லி, கடலைப்பருப்பு, இஞ்சி, தேங்காய்த்துருவல் நான்கையும் நன்றாக, கெட்டியாக அரைத்துக்கொதிக்க விட்டால் மோர்க்குழம்பு திக்காக இருக்கும்.
ரசத்துக்கு கொத்துமல்லி இல்லையென்றால், தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து போடலாம். ரசம் வாசனையாக இருக்கும்.
சப்பாத்தி மாவு இரண்டு கிண்ணம், ஒரு வாழைப்பழம், அரைக்கப் தயிர், தேவைக்கேற்ப உப்பு, மற்றும் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மிருதுவானதும், சுவையானதுமான சப்பாத்தி செய்யலாம்.
வெங்காயத்தை ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, மிக்ஸியில் அரைத்துச் சேர்த்தால் குழம்பு, சாம்பார் வகைகளில் புளிப்பு மட்டுப்படும்.
தேங்காய் இல்லாத சமயத்தில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை கரகரப்பாக அரைத்து குருமாவில் சேர்த்து சமைத்தால் குருமா புதுமையான சுவையுடன் இருக்கும்.
தேங்காய் உடைத்த இளநீரை ஊற்றி தயிர் சாதம் செய்து பாருங்கள். தயிர் சாதத்துக்கு டேஸ்ட் அதிகமாக இருக்கும்.
அரிசியை அரைக்கும்போது சிறிது அவல் சேர்த்தால் இட்லி பூப்போல இருக்கும்.
தோசை மாவு, தேவையை விட குறைவாக இருந்தால் அரிசி மாவு, தேங்காய் சிறிதளவு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்து அப்பம் போல வார்க்கலாம்.
கீரையை மசியல் செய்யும்போது சாதம் வடித்த கஞ்சியை சிறிது விட்டு மசித்தால் நன்கு குழைவாக மசியும். ருசியும் அருமையாக இருக்கும்.
மீதமான தேங்காய் சட்னியை, கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதிவிட்டால் சுவையான மோர்க்குழம்பு தயார்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர்விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.
புளியோதரை தயாரிக்கும்போது, அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வறுத்த கடலையை சேர்த்துப் பாருங்கள். புளியோதரை சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.