
உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நீக்குவதற்கு வெற்றிலையை பயன்படுத்தலாம். வெற்றிலைகள் ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப் படுகிறது. இவை செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றப்படும் பயன்படுத்தப்படுகிறது.
வெற்றிலை டீடாக்ஸ் பானம் (Detox water):
வெற்றிலை 3
துளசி இலைகள் 2
இஞ்சி துருவல் சிறிது
வெற்றிலைகளின் நன்மைகளை அனுபவிக்க எளிதான வழிகளில் ஒன்று. இரண்டு மூன்று வெற்றிலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி இரண்டு கப் தண்ணீரில் போட்டு மூடி வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வெற்றிலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். கல்லீரல் செயல்பாட்டையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
விருப்பப்பட்டால் இரண்டு துளசி இலைகளையும், ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி துருவியும் சேர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் வயிற்றுக் கோளாறுகளையும் போக்க உதவும்.
வெற்றிலை சாலட் (raw salad wraps):
வெற்றிலை 4
வெள்ளரிக்காய் பாதி
கேரட் பாதி
முளைவிட்ட பயறு 1/4 கப்
கருப்பு உப்பு தேவையானது
தயிர் சிறிது
புதினா இலைகள் 10
பொடியாக நறுக்கிய வெள்ளரித் துண்டுகள், துருவிய கேரட், முளைவிட்ட ஏதேனும் ஒரு பயறு மற்றும் தேவைக்கேற்ப சிறிது கருப்பு உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து விடவும். பச்சை காய்கறிகள் விட்டமின்கள் நிறைந்தவை. கால் கப் தயிரில் பத்து புதினா இலைகளை கையால் நன்கு கசக்கி சேர்த்து ஒரு துளி கருப்பு உப்பும் சேர்த்து ஒரு டிப் தயாரிக்கவும்.
வெற்றிலை நான்கை எடுத்து நன்கு கழுவித் துடைத்து வைக்கவும். ஒவ்வொரு வெற்றிலையிலும் அதன் மையத்தில் கலந்து வைத்துள்ள பூரணத்தை வைத்து சில துளிகள் டிப்பையும் சேர்த்து மடக்கி சுருட்டவும். சுவையான ருசியில், குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் ஏற்ற சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டும் சிறந்த வெற்றிலை சாலட் தயார்.
வெற்றிலை ஸ்மூத்தி:
வெற்றிலை 2
அன்னாசிப்பழம் 4 துண்டுகள்
புதினா இலை சிறிது
நெல்லிக்காய் 1
உப்பு தேவைக்கேற்ப
வெற்றிலை ஸ்மூத்தி சுவையில் அபாரமாக இருக்கும். அன்னாசி பழத் துண்டுகள், கொட்டை நீக்கிய நெல்லிக்காய், புதினா இலைகள் ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். ஒரு கப் தண்ணீர் கலந்து பருக உடல் புத்துணர்ச்சி பெரும்.
இது உடலை குளிர்விக்கவும், சருமத்தை சுத்தப்படுத்தவும், கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை செரிமானத்துக்கு ஏற்றது. இதனை காலையில் வெறும் வயிற்றில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு பருகலாம்.