

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் விளையும் பாரம்பரிய காய்கறியான அதலக்காய் (Athalaikai) மழைக்காலங்களில் இயற்கையாகவே கரிசல் மண் பகுதியில் விளையும். விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கும் அதலக்காய் மழைக் காலங்களில் மட்டுமே கிடைக்கும். வெயில் காலத்தில் கிடைக்காது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட அதலக்காய் குறித்து இப்பதிவில் காண்போம்.
பாரம்பரிய மூலிகையான அதலக்காய் பாகற்காய் (Momordica cymbalaria) குடும்பத்தைச் சேர்ந்தது. அதலக்காய் இன்சுலின் சுரப்பை அதிகரித்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்த கல்லீரலை பலப்படுத்தும் சிறந்த மருந்தாக உள்ளது. குடலில் இருக்கும் நாக்குப்பூச்சி, நச்சுக்களை வெளியேற்றி வயிற்றுப் புண்களை ஆறச்செய்கிறது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு குறைந்த கொழுப்பு கொண்ட சிறந்த காயாக அதலக்காய் இருப்பதால் இதனை மறக்காமல் டயட்டில் எடுத்துக்கொள்ளலாம். முழங்கால் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதோடு சளி, அஜீரணம் போன்றவற்றை குறைப்பதில் அதலக்காய் முக்கிய பங்காற்றுகிறது.
அதலக்காயை தனியாக விவசாயம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் மழைக்காலங்களில் இது தானாகவே வயல்கரைகளிலும் தரிசு நிலங்களிலும் முளைக்கக் கூடியது. அதலக்காய் நீண்ட நாட்கள் வைத்திருந்தால் முளைக்க ஆரம்பித்து விடும். ஆகவே நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல் உடனடியாக சமைத்து சாப்பிடுவது முழு பலன்பெற வழி வகுக்கும்.
அதலக்காய் கசப்பு தன்மையுடையதாக இருந்தாலும் சாப்பிடுவதற்கு ஏற்ற வித்தியாசமான சுவையில் இருக்கும். பார்ப்பதற்கு மிளகாய் போல தோற்றமளிக்கும் அதலைக்காய் படரும் தன்மை கொண்டதால் தரையிலேயே வளரும். இதற்கென தனியாக பந்தல் அமைத்து வளர்க்கத் தேவையில்லை.
வறட்சி காலத்தில் காய்ந்துவிடும் இச்செடி பல ஆண்டுகள் நீடித்து வாழும் தன்மை கொண்டது. ஏனெனில் மண்ணுக்கு அடியில் இருக்கும் கிழங்கு உயிருடன் இருப்பதால் பீனிக்ஸ் பறவை போல வெயில் காலத்தில் காய்ந்து மழைக்காலத்தில் வளர ஆரம்பித்து விடும்.
ஒரே கொடியில் ஆண் மலர்கள் தனியாகவும் பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும். இச்செடியின் இலை இதய வடிவத்திலும், மெல்லிய மஞ்சள் நிற மலர்களையும் கொண்டிருக்கும். அதலக் காயை கொண்டு பொரியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
அதலக்காய் பொரியல்
தேவையான பொருட்கள்:
அதலைக்காய் - 200 கிராம்
துருவிய தேங்காய் - 1/2 கப்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு -1 தேக்கரண்டி
எண்ணெய் மற்றும் உப்பு -தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அதலக்காயை தண்ணீரில் நன்றாக கழுவி, இரண்டு முனைகளையும் நறுக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு, கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய அதலக்காயை மிதமான தீயில் 5 நிமிடம் நன்றாக வதக்கவும். வதக்கிய காய்கறிகள் சுருங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி காய் வெந்த பிறகு தேங்காய் துருவல் போட்டு இறக்கி வைக்க சுவையான அதலக்காய் பொரியல் தயாராகிவிடும்.
வெடிக்கும் தன்மை கொண்ட அதலக்காயை கவனமாக வதக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.