ஹோட்டல் சுவையில் 'ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் புலவ்' செய்வது எப்படி? எளிய ரகசியம்!

baby cabbage poriyal
baby cabbage poriyal
Updated on

பேபி முட்டைகோஸ் எனவும் அழைக்கப்படும் ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் (Brussel Sprouts) என்ற காயை உபயோகித்து ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் புலவ் எப்படி தயாரிப்பது என்பதற்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்:

1.பாஸ்மதி ரைஸ் 1 கப்

2.கெட்டி தேங்காய்ப் பால் ¼ கப்

3.கரம் மசாலா பொடி ½ டீஸ்பூன்

4. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

5.நெய் 1 டேபிள் டீஸ்பூன்

6.லவங்கம் 4

7.சீரகம் 1 டீஸ்பூன்

8.நசுக்கிய கருப்பு மிளகுத் தூள் ½ டீஸ்பூன்

9.பொடிசா நறுக்கிய வெங்காயம் 1

10.இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன்

11.பொடிசா நறுக்கிய பூண்டு 2 டீஸ்பூன்

12.நறுக்கிய பச்சை மிளகாய் 1 டீஸ்பூன்

13. கறிவேப்பிலை 2 இணுக்கு

14.நெய்யில் வறுத்து உடைத்த முந்திரி 10

15.ஃபிரஷ் புதினா இலை 20

16.ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் 8

17.உப்பு தேவையான அளவு

18.பொடிசா நறுக்கிய மல்லி இலை ஒரு கைப்பிடி

செய்முறை:

பாஸ்மதி அரிசியை தண்ணீரில் போட்டு இருபது நிமிடம் ஊற வைக்கவும். ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ்களை ப்ளான்ச் (Blanch) பண்ணிக் கொள்ளவும். அதாவது, கொதிக்கும் நீரில் காய்களைப் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுத்து பச்சைத் தண்ணீரில் போட்டு குளிர்விக்கவும்.

பின் அதை சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாயகன்ற, அடிகனமான கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சூடானதும் எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றவும். மற்றொரு அடுப்பில் 2½ கப் தண்ணீர்ரை ஒரு பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும். கடாயில் ஊற்றிய நெய் உருகியதும் அதில் சீரகம் மற்றும் லவங்கத்தை போட்டு சிறு தீயில் சிவக்கவிடவும்.

பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பேஸ்ட் மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும். ஊற வைத்த பாசுமதி அரிசியை நீரை வடித்துவிட்டு கடாயில் சேர்த்து மேலும் கீழுமாக பிரட்டி விடவும். பின் தேங்காய் பால் மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை அரிசியில் ஊற்றி கலவை நன்கு கொதித்து அரிசியை வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

அரிசி முக்கால் பாகம் வெந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடி, நறுக்கி வைத்துள்ள ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ்களைப் போட்டு நன்கு கலந்துவிடவும். பின் கடாயை மூடி வைத்து சிறு தீயில் 7-8 நிமிடம் வைத்திருக்கவும். அவ்வப்போது மூடியை திறந்து நீர்ச்சத்தை செக் பண்ணிக் கொள்ளவும். புலவ் பொல பொல வென்று அடிப் பிடிக்காமல் வந்ததும், பாத்திரத்தை இறக்கி வைத்து, மிளகுத் தூள், மல்லி இலை மற்றும் முந்திரி தூவி சூடாகப் பரிமாறலாம். அப்பளம், வடாம், பூந்தி ரைத்தா போன்றவற்றை தொட்டுக்க வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் சுவையில் 3 வகை வெரைட்டி பொடிமாஸ்: சமைப்பது எப்படி?
baby cabbage poriyal

ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் ரெசிபி

தேவையான பொருட்கள்:

1.கொதி நீரில் போட்டு ப்ளான்ச் பண்ணிய ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் 250 கிராம்

2.கடுகு ½ டீஸ்பூன்

3.சீரகம் ½ டீஸ்பூன்

4.நசுக்கிய பூண்டுப் பற்கள் 5

5.கொர கொரப்பா அரைத்த வறுத்த வேர்கடலைப் பவுடர் 100 கிராம்

6.உப்பு தேவையான அளவு

7.ஃபிரஷ் கொத்த மல்லி இலைகள் 10

8.எண்ணெய் 4 டீஸ்பூன்

9.காய்ந்த சிவப்பு மிளகாய் 3

செய்முறை:

ப்ளான்ச் பண்ணிய காய்களை பொடிசா நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு சீரகம் போட்டு, அவை வெடித்ததும் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போடவும். பின் நசுக்கிய பூண்டுப் பற்களை சேர்க்கவும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள காயைக்கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறவும்.

கடாயை தட்டுப்போட்டு மூடி காயை சிறு தீயில் வேகவிடவும். பின் மூடியை திறந்து வேர்கடலைப் பவுடரை காய் மீது தூவிக்கலக்கவும். கடாயை இறக்கி வைத்து மல்லி இலைகள் தூவி அலங்கரிக்கவும்.

சாம்பார் சாதம், குழம்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையான ப்ரசல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் ரெடி!

logo
Kalki Online
kalkionline.com