

சௌசௌ பொடிமாஸ்
தேவை:
சௌசௌ – 2,
கீறிய பச்சை மிளகாய் – 6, பட்டை – சிறு துண்டு,
கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 100 கிராம்,
வெங்காயம் – 2,
சோம்பு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சௌசௌவை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவும். பொட்டுக்கடலை, சோம்பு இரண்டையும் அரைக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் சௌசௌ துருவலைப்போட்டு பொன்னிறமாக பொரித்து, எண்ணெயை வடித்துக்கொள்ளவும். இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த வெங்காய விழுதைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். பிறகு, பொரித்த சௌசௌ துண்டுகளைப் போட்டு, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு 5 நிமிடம் வதக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும். அசத்தல் சுவையில் சௌசௌ பொடிமாஸ் ரெடி.
குடமிளகாய் பொடிமாஸ்
தேவை:
நறுக்கிய குடமிளகாய் – கால் கிலோ,
தனியா, கொப்பரை, எள், வேர்க்கடலை – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தனியா, வேர்க்கடலை, எள், கொப்பரை ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய குடமிளகாயைப் போட்டு நன்கு வதக்கி, தனியே வைக்கவும். திரும்பவும் கடாயில் எண்ணெய் ஊற்றி பொடித்து வைத்துள்ள மசாலாத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கி, மிளகாய்த்தூள், புளிக்கரைசல், உப்பு சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறவும். வதக்கி வைத்த குடமிளகாயை இதில் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும். சூப்பர் சுவையில் குடமிளகாய் பொடிமாஸ் ரெடி.
மல்டி வெஜிடபிள் பொடிமாஸ்
தேவை:
கோஸ் – கால் கிலோ,
பீன்ஸ் – 100 கிராம்,
பச்சை பட்டாணி – அரை கப்,
கேரட் – 1,
தேங்காய்த் துருவல் – ஒரு கப்,
வேக வைத்த பாசிப்பருப்பு, வேக வைத்த கடலைப்பருப்பு – தலா அரை கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – ஒரு துண்டு,
கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
அனைத்து காய்கறிகளைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்பு போட்டு வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து… இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, வேக வைத்த காய்கள், வேக வைத்த பருப்புகள், தேங்காய் துருவல் சேர்த்து, உதிர் உதிராக கிளறி இறக்கவும். சுவையான மல்டி வெஜிடபிள் பொடிமாஸ் ரெடி.