

மாம்பழ மோர்க்குழம்பு
தேவை:
நறுக்கிய மாம்பழம் – ஒரு கப்
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு.
மஞ்சள்தூள் – சிறிது.
அரைக்க:
தேங்காய்த் துருவல்– அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
சீரகம் – கால் டீஸ்பூன்
பச்சரிசி – 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை:
மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும். தயிருடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்து கொள்ளவும். தேங்காய், வர மிளகாய், சீரகம், பச்சரிசி முதலியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த தேங்காய் விழுது, கடைந்த தயிர் முதலியவற்றை அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் மாம்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதிவிடவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து மோர்க் குழம்பில் ஊற்றி இறக்கவும். சுவையான மாம்பழ மோர்க்குழம்பு தயார்.
பீட்ரூட் மோர்க்குழம்பு
தேவை:
பீட்ரூட் நறுக்கியது - 1/4 கப்.
வெங்காயம் - 1
எண்ணெய், கடுகு உளுந்து - தலா ஒரு ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 1
தயிர் - ஒரு கப்
1 ஸ்பூன் சீரகம்
சிறிதளவு கருவேப்பிலை, மல்லித்தழை.
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சியை நன்றாக நசுக்கி சேர்க்கவும். பின்னர்
வெங்காயம், பீட்ரூட், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும் நன்றாக ஆறிய பின்பு கெட்டித் தயிரை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பீட்ரூட்டில் சேர்க்கவும். சுவையான சத்தான வித்தியாசமான பீட்ரூட் மோர்க்குழம்பு ரெடி.
வாழைத்தண்டு மோர்க்குழம்பு
தேவை:
நறுக்கிய வாழைத்தண்டு - 2 கப்
கடைந்த தயிர் - 4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம், தனியா - 1 டீஸ்பூ ன்
கடலைப்பருப்பு - 1 கப்
இஞ்சி - சிறிய துண்டு
கடுகு - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். அதேபோல் கடலைப் பருப்பையும் வேகவைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பச்சை மிளகாய், தனியா, சீரகம், கொத்தமல்லித்தழை, இஞ்சி ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து வேக வைத்துள்ள வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்கவும். பின்பு அதனுடன் தயிர், உப்பு, வேக வைத்துள்ள கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் வாழைத்தண்டு கலவையை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு மோர்க்குழம்பு தயார்.
பைனாப்பிள் மோர்க்குழம்பு
தேவை:
பைனாப்பிள் பழத்துண்டுகள்- 12
தேங்காய் - கால் மூடி
தயிர் – 4 கரண்டி
பச்சைமிளகாய் - 4 பெரியது
ஊறவைத்து அரைக்க:
துவரம்பருப்பு - 4 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து நறுக்கின அன்னாசிப்பழத்துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
ஓரளவு வதங்கின பிறகு 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு வேகவிடவும். ஊறவைத்த பொருட்களை தேங்காயுடன் அரைத்துவிட்டு பொருட்கள் அரைபட்டவுடன் தயிரையும் சேர்த்து அரைத்து வெந்து கொண்டிருக்கும் தண்ணீரில் கொட்டி அடுப்பைக் சிம்மில் வைக்கவும்.
நுரைத்து பொங்கி வரும் வரை அடிபிடிக்காமல் கிளறி வர வேண்டும். துவரம்பருப்பின் பச்சை வாடை மறைந்தவுடன். அடுப்பை அணைத்துவிட, சுவையான பைனாப்பிள் மோர்க்குழம்பு தயார்.