

தென்னிந்திய சமையலில் சாம்பார் என்பது அன்றாட உணவின் அங்கமாய் காணப்படும் அற்புதமான உணவு வகையாகும். இது சுவையுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும் ஒரு பாரம்பரியக் குழம்பு வகை.
துவரம்பருப்பு, காய்கறிகள், புளி, மசாலா தூள்கள் மற்றும் சிறந்த தாளிப்புடன் சேரும் போது சாம்பாரின் வாசனை சமையலறை முழுவதும் பரவி உணர்வைத் தூண்டும். இப்போது அந்த சுவையான சாம்பாரை எளிதில் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முக்கிய பொருட்கள்:
துவரம்பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் _2
புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு
தோலுரித்த சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) _ ஒரு கைப்பிடி
தக்காளி – 2(நறுக்கியது)
வெண்டைக்காய் / முருங்கைக்காய் / பூசணிக்காய் / கத்தரிக்காய் – தேவையான அளவு கலவையாக
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
சாம்பார்தூள் செய்ய
மிளகாய் – 6
கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
கருவேப்பிலை – சில
சிறிதளவு பெருங்காயம்
(இதனை வறுத்து மசித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது தயாரான சாம்பார் பொடி பயன்படுத்தலாம்.)
தாளிக்க:
நெய்_ 11/2 ஸ்பூன்
கடுகு – ½ டீஸ்பூன்
கருவேப்பிலை – சில
உலர்ந்த மிளகாய் – 1
பெருங்காயத்தூள் _1/4 ஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை கழுவி, தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்து வரும் போது மேலே வரும் மிதையை கரண்டியால் எடுத்து விட்டு அத்துடன், சிறிது மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும்வரை குழைய வேக வைக்கவும். பின்னர் புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, புளி நீரை வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், முருங்கைக்காய் மற்றும் மீதமுள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
காய்கள் நன்கு வதங்கியதும் 11/2 ஸ்பூன் சாம்பார் பொடி, ½ ஸ்பூன் மஞ்சள் பொடி, சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும் தேவையான உப்பை சேர்த்து மீடியமான கலரில் உள்ள புளியை ஊற வைத்து வடிகட்டி வைத்த புளி நீரை சேர்க்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்து வர சாம்பாரை மூடி வைக்காமல் திறந்து வைத்தே கொதிக்க விடவும். காய்கறிகள் நன்கு வெந்த பிறகு வேக வைத்த பருப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து 12 நிமிடம் கொதிக்க விடவும். வாசனை வரும் வரை நன்கு கலக்கவும்.
கடைசியாக சாம்பார் வித்தியாசமான மணத்துடன் வர சிறிய வாணலியில் நெய் விட்டு கடுகு, உலர்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றவும். தாளித்ததும் அடுப்பை அணைத்து, சாம்பாரை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இதனால் வாசனையும் சுவையும் நன்கு ஒருங்கிணையும். சுவையான, மணமுள்ள சாம்பார் தயார் இதை வெந்த சாதத்துடன் பரிமாறலாம். ஒரு சுடு சாதத்துடன் ஒரு கரண்டி நெய் மற்றும் சாம்பார் கலந்து சாப்பிடும் போது மனமும் உடலும் மகிழ்ச்சி அடையும். பாரம்பரியம், சுவை, ஆரோக்கியம். இவை மூன்றையும் இணைக்கும் உணவு இதுவே “சாம்பார்”.