இந்த காலத்தில் பர்கர் பிசா என்று துரித உணவு பக்கம்தான் அனைவரின் கவனமும் செல்கிறது. ஆனால் நம் நாட்டு காய்களில் இருக்கும் சத்தும் ஆரோக்கியமும் வெளிநாட்டு உணவுகளான அதில் சிறிதும் இல்லை என்பது தெரியுமா? காய்கறிகளின் கூட்டும் மோர் குழம்பும் நமது தமிழக உணவில் பெரும்பாலும் இடம் பிடிக்கும் ரெசிபிக்களாகும். எத்தனை முறை செய்தாலும் அலுக்காத இவற்றை செய்முறைகள் இங்கே:
கலவைக்காய் கூட்டு
தேவை:
பரங்கிக்காய்
கத்தரிக்காய்
அவரைக்காய்
சர்க்கரைவள்ளி கிழங்கு
உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
வாழைக்காய்
உரித்த பச்சை மொச்சைக்காய் இவை அனைத்தும் கலந்த காய்கள் - 1/4 கிலோ தேங்காய் -அரை மூடி
சாம்பார்த்தூள்- இரண்டு டீஸ்பூன்
கடுகு உளுந்து - தாளிக்க
கருவேப்பிலை- சிறிது
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
நாட்டு கொத்தமல்லி , பச்சரிசி , வெள்ளை எள்ளு- தலா ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு , துவரம் பருப்பு - தலா இரண்டு டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய்அளவு
காய்ந்த மிளகாய்- 6
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
ஒரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு நாட்டுக் கொத்தமல்லி (தனியா), உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, அரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவக்க வறுத்து அத்துடன் தேங்காய் துருவலையும் கடைசியாக சேர்த்து வறுத்து மிக்சியில் அரைக்கவும். புளியை சிறிது வெந்நீரில் ஊறவிடவும். காய்கறிகளை ஒரே அளவான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை போட்டுத் தாளித்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கரைத்து வைத்துள்ள புளிக் கரைசல் ,மஞ்சள்தூள், சாம்பார்தூள், உப்பு சேர்த்து நன்றாக வேகவிடவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தனியா விழுது சேர்த்து சிறிது நீர் சேர்த்துக் கொதி வந்து பச்சை வாசம் போனதும் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும். இந்த கூட்டு சூடான வெண்பொங்கல், வெள்ளை சோறுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
சுண்டைக்காய் மோர் குழம்பு
தேவையான பொருட்கள்:
கெட்டியான தயிரில் கடைந்த மோர் - ஒரு கப்
சுண்டை வற்றல் (கடைகளில் கிடைக்கும்) 10 அல்லது 15
வெண்டைக்காய் - 3
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை கருவேப்பிலை சிறிது
கடுகு உளுந்து - தாளிக்க
உப்பு- தேவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
அரைக்க:
தனியா சீரகம் அரிசி- தலா ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன் தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை:
நன்கு கடைந்த மோருடன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது நேரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை மோருடன் கலந்து அடுப்பில் வைத்து நுரைத்து வந்ததும் கொதிக்க விடாமல் இறக்கி விடவும். தனியே ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு கருவேப்பிலை போட்டுத் தாளித்து நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து பிசுபிசுப்பு தன்மை போகும்வரை நன்கு வறுத்து ஓரளவு வதங்கியதும் மோருடன் கலக்கவும். அதேபோல் சுண்டைக்காய் வற்றலையும் எண்ணெயில் வறுத்து மோர் குழம்புடன் கலந்தால் ருசியான மோர்க்குழம்பு சூடான சாதத்தில் போட்டு சாப்பிட ரெடி.