

முட்டைகோஸ் துவரை பொரியல் செய்யத் தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது -இரண்டு கப்
பச்சை துவரை- கால் கப்
பெரிய வெங்காயம் நறுக்கியது- ஒன்று
சாம்பார் பொடி- ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல்- ஒரு டேபிள் ஸ்பூன்
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது- இரண்டு
உப்பு -ருசிக்கேற்ப
தாளிக்க தேவையான அளவு- கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, தனியா, எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துருவல் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் முட்டைக்கோஸ், துவரை சேர்த்துக்கிளறி சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை கரகரப்பாக அரைத்து அதில் சேர்த்து சுருள வதக்கி எடுக்கவும். வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும் இந்த பொரியலை சப்பாத்தியோடும் சேர்த்து சாப்பிடலாம். சாம்பார், ரசம் சாதத்துக்கும் நல்ல ஜோடி சேரும். பச்சை துவரை கிடைக்கும் இந்த சீசனில் இதை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
வாழைக்காய் வறுவல்
செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் வட்டமாக நறுக்கியது- ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
மிளகாய் பவுடர்- ஒரு டீஸ்பூன்
மல்லி பவுடர்- ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பவுடர்- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயுடன் எண்ணெயைத் தவிர அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கடாயில் முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும். மசாலா நீர்க்க இல்லாமல் வாழக்காய் உடன் நன்றாக ஒட்டி இருக்குமாறு வேகவைத்து எடுப்பது அவசியம்.
தோசை தவாவில் எண்ணெய் விட்டு மசாலாவுடன் உள்ள வாழைக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி விட்டு மேலே சிறிதளவு எண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் இரண்டு புறமும் திருப்பிப் போட்டு எடுத்து வைக்கவும். இஞ்சி பூண்டு வாசனை உடன் காரசாரமாக இருக்கும் இந்த வாழைக்காய் வறுவல் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
அனைத்து சாத வகைகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை வறுப்பதற்கு அதிக எண்ணெய் தேவையில்லை. இஞ்சி பூண்டு சேர்த்து இருப்பதால் வாயு பிடிப்பு ஏற்படாது.