

வெங்காயத்தாள் இஞ்சி துவையல்
தேவை:
நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்,
தோல் சீவிய இஞ்சி - ஒரு துண்டு,
தோலுரித்த சின்ன வெங்காயம் - 8,
பச்சை மிளகாய் - 2,
புளி - கோலி குண்டு அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தாள், இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்து வைத்த துவையலுடன் கலக்கவும். இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
வெங்காயத்தாள் பொரியல்
தேவை:
சின்ன வெங்காயம் – கால் கப்
வெங்காயத் தாள் – அரை கப்
தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைகேற்ப
செய்முறை:
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் சின்ன வெங்காயம் போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் வெங்காயத்தாள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயத்ததாள் விரைவில் வெந்து விடும். ஐந்து நிமிடங்களுக்கு, பிறகு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும். சுவையான, சத்தான வெங்காயத்தாள் பொரியல் ரெடி.
வெங்காயத்தாள் சூப்
தேவை:
வெங்காயத்தாள் - அரை கப் (நறுக்கியது)
கேரட், முட்டைக் கோஸ், பீன்ஸ் - தலா கால் கப் (நறுக்கியது)
மிளகுத்தூள், சோள மாவு, சோயா சாஸ் - தலா அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயத்தாள், ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். வதக்கிய பின் காய்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்ததும் சோயாசாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். குறைந்த தீயில் 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான வெங்காயத்தாள் சூப் ரெடி.
வெங்காயத்தாள் சப்பாத்தி
தேவை:
கோதுமை மாவு - 2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப் கேரட் துருவல் - 2 டீஸ்பூன். ஓமம் - அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன். எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, வெங்காயத்தாள், உப்பு, கேரட் துருவல், ஓமம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெதுவாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் சிறிதளவு எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான வெங்காயத்தாள் சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள கேரட் தயிர்ப் பச்சடி வெகு பொருத்தம்.