இன்னைக்கு ரொம்ப டேஸ்டியான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இலை அடை மற்றும் இட்லி மாவு கொழுக்கட்டை ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை தான் பாக்க போறோம். இரண்டுமே வேகவைத்து எடுக்க கூடிய உணவு என்பதால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். சரி வாங்க, எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.
இலை அடை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு-1 ½ கப்.
ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-1 கப்
உப்பு- தேவையான அளவு.
வெல்லம்-1 கப்.
நெய்- தேவையான அளவு.
இலை அடை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பவுலில் 1 ½ கப் அரிசி மாவை எடுத்து கொள்ளவும். அத்துடன் கொஞ்சமாக உப்பு சேர்த்து சுடுநீரை சிறிது சிறிதாக விட்டு மாவை பிசைந்து வைத்து கொள்ளவும்.
பூரணம் செய்ய ஒரு ஃபேனில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும், அத்தோடு 1/2தேக்கரண்டி ஏலக்காய் தூள், 1கப் வெல்லம் சேர்த்து நன்றாக கிண்டவும். பூரணம் நன்றாக திரண்டு வந்ததும் தனியாக எடுத்து வைதத்து கொள்ளவும்.
இப்போது ஒரு வாழை இலையில் சிறிது நெய் தடவி விட்டு அதில் மாவு சிறிது வைத்து தட்டையாக அழுத்தி அதனுள் தேவையான அளவு பூரணத்தை வைத்து மடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான இலை அடை தயார். நீங்களும் வீட்டில் மறக்காமல் செய்து பார்த்துட்டு சொல்லுங்க.
இட்லி மாவு கொழுக்கட்டை:
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு-1 கப்.
சிறிய துண்டுகளாய் வெட்டிய தேங்காய்-1 கப்
முந்திரி-10
நெய் -தேவையான அளவு.
ஏலக்காய் தூள்-சிறிதளவு.
நாட்டு சக்கரை-1கப்.
கொழுக்கட்டை செய்முறை விளக்கம்:
முதலில் ஃபேனில் 1 தேக்கரண்டி நெய் விட்டு சிறிதாக வெட்டிய தேங்காய் ½ கப், முந்திரி 10 சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது ஃபேனில் 1 கப் நெய் சேர்த்து இட்லி மாவு 1 கப் சேர்த்து நன்றாக கிண்டவும். அத்துடன் 1 கப் நாட்டு சக்கரை சேர்த்து நன்றாக கிண்டவும். கொழுக்கடை பிடிக்கும் பதத்திற்கு மாவு வந்ததும் அத்துடன் வறுத்து வைத்த தேங்காய், முந்திரியும், சிறிது ஏலக்காய் தூள் சேர்த்துவிட்டு கையில் நெய் தடவிக்கொண்டு கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான இட்லிமாவு கொழுக்கட்டை தயார். செம டேஸ்டாக இருக்கும் நீங்களும் ஒருமுறை வீட்டிலே டிரை பண்ணி பார்த்துட்டு சொல்லுங்க.