
முலாம்பழ மில்க் ஷேக்:
முலாம் பழத் துண்டுகள் ஒரு கப்
பால் ஒரு கப்
சர்க்கரை 1/4 கப்
அலங்கரிக்க: முலாம் பழத்துண்டுகள் 2 ஸ்பூன்
முலாம்பழம் வெயிலுக்கு ஏற்றது. உடல் சூட்டை போக்கக்கூடியது. நல்ல மணமும் சுவையும் கொண்டது. இதில் விட்டமின் ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
முலாம் பழத்தை தோல் சீவி, விதைகளை எடுத்துவிட்டு துண்டுகளாக நறுக்கவும். இதனை மிக்ஸியில் போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும். பிறகு காய்ச்சி ஆறவைத்த பால் சேர்த்து மிக்ஸியில் பல்ஸ் மோடில் வைத்து இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். மிகவும் மணமான, சுவையான முலாம்பழ மில்க் ஷேக் ரெடி. இதனை பிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் டம்ளர்களில் விட்டு மேலே அலங்கரிக்க சிறிய துண்டுகளாக நறுக்கிய முலாம் பழத்தை சேர்த்து பருக அருமையாக இருக்கும்.
முலாம்பழ ஐஸ்கிரீம்:
முலாம்பழம் 1
பால் 1 கப்
சர்க்கரை 1/2கப்
அலங்கரிக்க: பிஸ்தா, முந்திரித் துண்டுகள்
முலாம்பழத்தின் தோல் சீவி விதைகளை எடுத்துவிட்டு சின்னத் துண்டுகளாக நறுக்கி சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். கட்டிகள் எதுவும் இல்லாமல் ஒரு கப் பால் சேர்த்து நன்கு அரைத்தெடுக்கவும். இதனை ஒரு பாத்திரத்தில் விட்டு 4 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
பிறகு எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதே பாத்திரத்தில் போட்டு வைக்கவும். மீண்டும் மூன்று மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். இதுபோல் இரண்டு மூன்று முறை மிக்ஸியில் அடித்து பாத்திரத்தில் விட்டு ஃப்ரீசரில் வைக்க கடைகளில் வாங்கும் ஐஸ்கிரீம் போலவே ரொம்ப ஸ்மூத்தாக இருக்கும். கடைசி முறை அடித்து வைக்கும் பொழுது மேலாக பிஸ்தா, முந்திரி பருப்புகளை தூவி வைக்கவும். சுவையான முலாம் பழ ஐஸ்கிரீம் தயார்.
முலாம்பழ ஹெல்தி சாலட்:
முலாம்பழம் 1
உப்பு 2 சிட்டிகை
மிளகு தூள் 1/2 ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு சிறிது
சர்க்கரை 1 ஸ்பூன்
முலாம்பழத்தை தோல் சீவி உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். பிறகு அதில் உப்பு, மிளகுத்தூள், சர்க்கரை, எலுமிச்சைசாறு கலந்து பரிமாற மிகவும் ருசியான முலாம் பழ சாலட் தயார். தாகம் தணிக்கும். செய்வது எளிது. ருசியும் அசத்தலாக இருக்கும்.