
உடனடி கோதுமை ரவா இட்லி:
இட்லிக்கு மாவு அரைக்க வேண்டாம். புளிக்க வைக்கவேண்டாம். உடனடியாக செய்யக்கூடிய இந்த கோதுமை ரவா இட்லியை பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.
கோதுமை ரவை ஒரு கப்
புளித்த தயிர் ஒரு கப்
நெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
தாளிக்க: கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை
ஒரு பாத்திரத்தில் இன்ஸ்டன்ட் கோதுமை ரவை, புளித்த தயிர், உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம் எல்லாம் தலா அரை ஸ்பூன் சேர்த்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பும் சேர்த்து கடுகு பொரிந்ததும் கலந்து வைத்துள்ள மாவில் கொட்டி 2 ஸ்பூன் நெய், தேவைப்பட்டால் கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்தில் ரெடி பண்ணவும். இதனை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் விட்டு ஏழெட்டு நிமிடங்கள் நன்கு வேகவிடவும். மிகவும் ருசியான, ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் கோதுமை ரவா இட்லி தயார்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளை மாவில் சேர்த்து கலந்து இட்லி செய்யலாம்.
மைசூர் சட்னி:
வெள்ளை எள் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
தேங்காய், 1/4 கப்
சின்ன வெங்காயம் 4
உப்பு தேவையானது
புளி நெல்லிக்காயளவு
மிளகாய் வற்றல் 6
பூண்டு 4பற்கள்
தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சிறிது
வாணலியில் முதலில் எள்ளைப்போட்டு படபடவென பொரியும் வரை வறுத்தெடுக்கவும். அடுத்து நல்லெண்ணெய் 2 ஸ்பூன் விட்டு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், பூண்டு, கறிவேப்பிலை, நார் கொட்டைகள் நீக்கிய புளி, சிகப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி ஆறவிடவும்.
மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களுடன் பொட்டுக்கடலை, தேவையான உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டி கலந்துவிட மிகவும் ருசியான மைசூர் சட்னி தயார். இட்லி, தோசை, பொங்கல் என அனைத்து டிபன் வகைகளுக்கும் ஏற்ற சட்னி இது.