
வீட்டில் விருந்து கல்யாண விருந்து இரண்டிலும் நம் இலையில் முதலில் உப்பு வைத்த பிறகு வைப்பது அல்வா எனும் இனிப்பு தான். தொண்டைக்குள் நைசாக இறங்கும் அல்வாவை விரும்பாதவரும் உண்டோ? இதோ இங்கு உங்களுக்காக சில பாரம்பரிய அல்வா வகைகள்..
தேங்காய் பால் அல்வா
தேவை:
தேங்காய் - 1
பச்சரிசி - ஒரு கைப்பிடி
சர்க்கரை- 3 கப் அல்லது தேவைக்கேற்ப ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
தேங்காயை அடிவரை திருவாமல் வெள்ளையாக துருவி அதை மிக்ஸியில் போட்டு ஒரு கப் நீரூற்றி மூன்று கப் இருக்கும்படி கெட்டிப்பால் எடுக்கவும். பச்சரிசியை சிறிது நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து தேங்காய் பாலுடன் கலந்து மிதமான தீயில் கட்டி விழாமல் நன்றாக கிண்டிவிடவும்.
வெந்து நிறம் மாறிய பின் சர்க்கரையைக் கொட்டி கிளறி அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்த்து ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் பதம் வந்ததும் சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். அல்லது அப்படியேவும் சாப்பிடலாம். இந்த தேங்காய் பால் அல்வா குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான அல்வா. இதில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரையும் சேர்க்கலாம்.
கேரட் அல்வா
தேவை:
கேரட் - 1/4 கிலோ
சர்க்கரை - 2 கப்
பால் - 1 கப்
நெய் - 100 கிராம்
ஏலக்காய் - 6
லவங்கம்- 4
முந்திரிப்பருப்பு -15
செய்முறை:
முதலில் கேரட்டை கழுவி சுத்தம் செய்து துருவியில் துருவிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் ஒரு கப் பாலில் கேரட் துருவலை மிதமான தீயில் 10 நிமிடம் மூடிப் போட்டு வேக விடவும். பால் சுண்டி வருகையில் சர்க்கரையை போட்டு நன்கு கிளறி விடவும். அடுப்பை மிதமாகவே எறியவிட்டு தொடர்ந்து விடாமல் கிளறிக் கொண்டிருக்கவும்.
அல்வா பதத்தில் வரும்போது நெய்யை ஊற்றிக் கிளறி ஏலக்காய் கிராம்பை பொடி செய்து போடவும். அல்வா நன்றாக திரண்டு வந்த பின் நெய் தடவிய கொட்டில் கிண்ணங்களில் போட்டு மேலே வறுத்த முந்திரிப் பருப்பை தூவி அலங்கரித்து தரலாம். இதில் ஃபுட் கலர் சேர்ப்பது அவரவர் பிரியம் மற்றும் மில்க் மெய்டு சேர்த்தும் கேரட் அல்வாவை செய்யலாம்.
கராச்சி அல்வா
தேவை:
மைதா - 1கப்
சர்க்கரை - 3 கப்
நெய்- 1கப்
ஜாதிக்காய் பொடி - 1டீஸ்பூன் முந்திரிப்பருப்பு - 25 கிராம்
பிஸ்தா பருப்பு - 25 கிராம்
ஏலக்காய் பொடி - 1/2டீஸ்பூன்
செய்முறை:
அடிகனமான கடாயில் சர்க்கரையை கம்பி பதம் வரும்வரை சிறிது நீரூற்றி காய்ச்சி மைதாவை நன்கு கரைத்து சர்க்கரை பாகில் விட்டு கட்டி விழாமல் கிளறவும். இதில் கிளறும்போதே அடிக்கடி நெய் விட்டு கிளறினால் அடி பிடிக்காது. மிதமான தீயில் வைத்து கிளறவும்.
முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்புகளை சிறிது நெய்யில் வறுத்து கலவை கெட்டியாகி அல்வா பதம் வரும்போது கிளறி அதில் போட்டு ஏல பொடியையும் போட்டு அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடலாம். இந்த வித்தியாசமான கராச்சி அல்வாவை அனைவரும் விரும்புவார்கள்.