வாயில் போட்டால் கரையும் சுவை! கேரட்டில் இப்படி ஒரு லட்டு செய்ய முடியுமா?

Carrot Laddu
Carrot Laddu
Published on

குழந்தைகளுக்குக் காய்கறிகளைக் கொடுப்பது என்பது ஒரு போர்க்களத்தில் போராடுவதற்குச் சமம். அதிலும் கேரட் என்றாலே தூரம் ஓடும் குட்டீஸ் பல வீடுகளில் உண்டு. "கண்ணுக்கு நல்லது செல்லம், சாப்பிடு" என்று கெஞ்சினாலும் அவர்களுக்கு இறங்காது. ஆனால், அதே கேரட்டை ஒரு அழகான, கலர்ஃபுல்லான ஜெல்லி மிட்டாய் போல மாற்றிக் கொடுத்தால்? நிச்சயம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். 

வழக்கமான கேரட் அல்வா செய்து போர் அடித்தவர்களுக்கு, இது ஒரு வித்தியாசமான ரெசிபி. பார்ப்பதற்குக் கடைகளில் வாங்கும் விலை உயர்ந்த இனிப்பு போலவே இருக்கும்; ஆனால் செய்வது மிக எளிது. வாருங்கள், காய்கறியை விரும்பாத குழந்தைகளையும் மயக்கும் அந்த ருசியான கேரட் இனிப்பை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் – ½ கிலோ

  • சோள மாவு – 3 டீஸ்பூன்

  • சர்க்கரை – ½ கிலோ

  • தண்ணீர் – ½ லிட்டர்

  • சிவப்பு ஃபுட் கலர் – 2 சிட்டிகை

  • துருவிய தேங்காய் – அலங்கரிக்க

  • வெண்ணிலா எசென்ஸ் – வாசனைக்குச் சிறிதளவு

  • முந்திரி, பாதாம் – அலங்கரிக்க

செய்முறை!

முதலில் கேரட்டை நன்கு கழுவி, தோலைச் சீவிவிட்டுச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்தத் துண்டுகளைப் போட்டு, அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். 

கேரட் நன்கு மசியும் அளவிற்கு வேக வேண்டும். வெந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, அந்தத் தண்ணீரோடு அப்படியே ஆறவிடவும். தண்ணீரை வடித்து விடாதீர்கள், அதில்தான் சத்துக்கள் இருக்கும்.

கேரட் நன்கு ஆறியதும், வேகவைத்த தண்ணீர் மற்றும் கேரட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும். இதனுடனேயே சர்க்கரை மற்றும் பைண்டிங் ஏஜெண்டான சோள மாவையும் சேர்த்துக்கொள்ளவும். 

இதையும் படியுங்கள்:
ஒத்தையா உள்ள முடி கத்தையா வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
Carrot Laddu

இதை நைஸாக, கட்டிகள் ஏதுமின்றி ஒரு மென்மையான கூழ் போல அரைத்து எடுக்கவும். இந்த விழுதில் விருப்பப்பட்டால் சிவப்பு நிற ஃபுட் கலரைச் சேர்த்து மீண்டும் ஒரு சுற்றுச் சுற்றினால், இனிப்பு பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும்.

இப்போது அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து, நாம் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதை ஊற்றவும். அடுப்பை மிதமான தீயல் வைத்துத் தொடர்ந்து கிளற வேண்டும். 

சோள மாவு சேர்த்திருப்பதால், கலவை சீக்கிரம் கெட்டியாகத் தொடங்கும். அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கலவை நன்றாகச் சுருண்டு, அல்வா பதத்திற்குப் பளபளவென வரும்போது, வாசனைக்காகச் சிறிது வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

இதையும் படியுங்கள்:
ஏன், எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டும்?தெரிஞ்சுக்கலாமா குட்டீஸ்?
Carrot Laddu

கலவை கை பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு, கையில் சிறிது நெய் தடவிக்கொண்டு, அதைச் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். பிறகு, ஒரு தட்டில் உலர்ந்த தேங்காய்த் துருவலைப் பரப்பி, இந்த உருண்டைகளை அதில் பிரட்டி எடுக்கவும். 

இது பார்ப்பதற்குப் பனி போல அழகாக இருக்கும். கடைசியாக, ஒவ்வொரு உருண்டையின் மீதும் ஒரு முந்திரியோ அல்லது பாதாமோ வைத்தால், சுவையான கேரட் ஸ்வீட் தயார்!

இந்த இனிப்பைச் செய்தவுடன் சாப்பிடுவதை விட, ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, ஜில்லென்று பரிமாறினால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com