cauliflower keema masala
cauliflower keema masala

இப்படி ஒரு முறை காலிஃப்ளவர் கீமா மசாலா செஞ்சு பாருங்க! 

Published on

சைவ உணவு விரும்பிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அருமையான ரெசிபி இந்த காலிஃப்ளவர் கீமா மசாலா. காலிஃப்ளவரை துருவி அல்லது பொடியாக நறுக்கி, மசாலா சேர்த்து சமைக்கும் போது இது அச்சு அசலாக கீமா போலவே இருக்கும். இதில் உள்ள மசாலா பொருட்கள் மற்றும் காலிஃப்ளவரின் சுவை இரண்டும் சேர்ந்து ஒரு தனித்துவமான ருசியைக் கொடுக்கும். பாரம்பரிய கீமா மசாலாவுக்கு ஒரு சிறந்த சைவ மாற்றாக இது இருக்கும். வாங்க, இந்த சுவையான காலிஃப்ளவர் கீமா மசாலா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • காலிஃப்ளவர் - 1

  • வெங்காயம் - 2

  • தக்காளி - 2 

  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

  • பச்சை மிளகாய் - 2

  • பட்டை - 1 சிறிய துண்டு

  • கிராம்பு - 2

  • ஏலக்காய் - 1

  • பிரியாணி இலை - 1

  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 

  • கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

  • சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

  • கசூரி மேத்தி - 1 தேக்கரண்டி

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • எண்ணெய் - 2 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  1. முதலில் காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து, துருவி அல்லது மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

  3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். தக்காளி மென்மையானதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

  5. மசாலா வாசனை போனதும் துருவிய அல்லது நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலந்து விடவும்.

  6. பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு, குறைந்த தீயில் காலிஃப்ளவர் வேகும் வரை சமைக்கவும்.

  7. காலிஃப்ளவர் வெந்ததும், கசூரி மேத்தி சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரம் கொதிக்க விட்டு, தண்ணீர் வற்றி, கீமா மசாலா பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  8. இறுதியாக, கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

காலிஃப்ளவர் கீமா மசாலாவை சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா அல்லது சாதத்துடன் பரிமாறலாம். தயிர் பச்சடி அல்லது வெங்காய ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.

சைவ உணவு விரும்பிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இந்த ரெசிபியை நீங்களும் வீட்டில் செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்க.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு உணவு போதுமா பாஸ்? - மோனோ டயட் ரகசியம்!
cauliflower keema masala
logo
Kalki Online
kalkionline.com