
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி
தேவை:
காலிஃப்ளவர் – 1,
கோதுமை மாவு – 200 கிராம்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
காலிஃப்ளவரை சிறிய பூக்களாக நறுக்கவேண்டும். சூடான நீரில் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு காலிஃப்ளவர் பூக்களைத் தனியே எடுத்து வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர்விட்டு பூரி மாவு போல பிசைய வேண்டும்.
காலிஃப்ளவருடன் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மசிக்க வேண்டும். கோதுமை மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக திரட்டி நடுவே காலிஃப்ளவர் கலவையை வைத்து மடித்து மீண்டும் திரட்ட வேண்டும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்க காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பூரி தயார்.
காலிஃப்ளவர் ரைஸ்
தேவை:
வடித்த சாதம் – ஒரு கப், காலிஃப்ளவர் (சிறியது) – ஒன்று, பச்சை மிளகாய் – 4, லவங்கம் – ஒன்று,
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்,
தக்காளி – ஒன்று,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய், பெருங்காயம், மஞ்சள்தூள் – தாளிக்க தேவையான அளவு, உப்பு.
செய்முறை:
காலிஃப்ளவரை தண்டு நீக்கி, பொடியாக நறுக்கி, வெந்நீரில் போட்டு எடுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் காயவிட்டு… கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், லவங்கம் ஆகியவற்றை தாளிக்கவும். இதில் மஞ்சள்தூள், பச்சை மிளகாய், காலிஃப்ளவர் துண்டுகள், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இதனுடன் வடித்த சாதம் சேர்த்துக்கிளறினால்… காலிஃப்ளவர் ரைஸ் ரெடி!
காலிஃப்ளவர் போண்டா
தேவை:
பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர்,
வெங்காயம், கடலை மாவு - தலா ஒரு கப்,
சோள மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி - ஒரு சிறு துண்டு,
வாழைக்காய் - 1,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவர், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வாழைக்காயை வேகவைத்து, தோல் உரித்து, பொடியாக நறுக்கி வதக்கிய காலிஃப்ளவர், வெங்காயத்துடன் சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். அரிசி மாவு, கடலை மாவு, சோள மாவு மூன்றையும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.
உருண்டைகளை கரைத்த மாவில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான காலிஃப்ளவர் போண்டா தயார்.
காலிஃப்ளவர் ஊறுகாய்
தேவை:
உதிர்த்து, வெந்நீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவர் - ஒரு கப்,
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீ ஸ்பூன், கடுகு, வெந்தயத்தூள் - தலா அரை டீஸ்பூன் (வெந்தயத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடிக்கவும்), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டுத் தாளித்து, காலிஃப்ளவரைப் போட்டு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து பயன்படுத்தவும்.