
நாம் உணவு உட்கொள்ளும்போது சாம்பார், கூட்டு என எத்தனை வகையிருந்தாலும் சைடுல ஒரு சட்னியிருந்தா கூட ரெண்டு கை சாப்பாடு உள்ள போகும். அதிலும் கார சாரமா ஆந்திரா ஸ்டைல் சட்னினா... கேக்கவே வேணாம்! இதோ சில ஆந்திரா ஸ்டைல் சட்னி ரெசிபிகள்.. உங்களுக்காக!
தக்காளி பீநட் சட்னி:
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் மூன்று தக்காளிப் பழங்களை நறுக்கி எண்ணெயில் போட்டு வதக்கவும். பழம் வெந்து மிருதுவானதும் ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். கடாயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் முக்கால் கப் தோலுரித்த வேர்கடலைப் பருப்பு, ஐந்து பல் பூண்டு, 5-6 சிவப்பு மிளகாய், ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பொன்னிறம் வந்ததும் எடுத்து தக்காளிப் பழங்களுடன் சேர்த்து வைக்கவும்.
அனைத்தும் ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்தெடுக்கவும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இஞ்சி சட்னி (Allam Pachadi):
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இரண்டு டீஸ்பூன் சன்னா டால், இரண்டு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே எண்ணெயில் ஒரு வெங்காயத்தை மெல்லிசா நறுக்கிப்போட்டு சிவந்தவுடன் எடுத்து பருப்புடன் சேர்க்கவும். மிக்ஸியில்
தோலுரித்து நறுக்கிய 40 கிராம் இஞ்சி, இரண்டு சிவப்பு மிளகாய், முப்பது கிராம் வெல்லம், கொட்டை இல்லாத புளி ஒரு நெல்லிக்காய் அளவு, தேவையான உப்பு மற்றும் வறுத்து வைத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு கொஞ்சம் கொர கொரப்பா அரைத்தெடுக்கவும். ஆரோக்கியமான, செரிமானத்துக்கு உகந்த சட்னி ரெடி.
சிவப்பு மிளகாய் சட்னி:
ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சன்னா டால், ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். பின் அதில் கால் டீஸ்பூன் பெருங்காயதூள்,
ஐந்து பல் பூண்டு, உரித்த சின்ன வெங்காயம் 7 சேர்த்து வதக்கவும். அவை வெந்து வரும்போது 10-12 சிவப்பு மிளகாய் கிள்ளிப்போட்டு வதக்கவும். பின் அடுப்பை நிறுத்திவிட்டு, வதக்கியவற்றை ஆற விடவும். பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் பொட்டுக் கடலை, உப்பு மற்றும் சட்னி பதத்திற்கு தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அரைத்தெடுக்கவும். கார சாரமான மிளகாய் சட்னி தயார்.
மேத்தி சட்னி (Menthi Kura Pachadi):
2 கப் மேத்தி (வெந்தய) இலைகளை கழுவி, நீரை வடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முக்கால் டேபிள் ஸ்பூன் சன்னா டால், முக்கால் டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும். பின் அதனுடன் அரை டீஸ்பூன் சீரகம், சிறு துண்டு கொட்டை இல்லாத புளி, 2-3 சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், மேத்தி இலை, உப்பு சேர்த்து சிறு தீயில் சுமார் இரண்டு நிமிடம் வதக்கவும். மேத்தி இலை மிருதுவானதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்தெடுக்கவும். மேத்தி சட்னி ரெடி. சூடான சாதத்தில் கலந்து நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து உண்ணவும்.
மேலே கூறிய அனைத்து சட்னி வகைகளையும் செய்யும்போது அவரவர் தேவைக்கு ஏற்றபடி உப்பு, புளி, மிளகாய் போன்றவற்றை கூட்டியோ குறைத்தோ போட்டு தயாரித்துக் கொள்ளலாம்.