சப்பாத்தி இனி 'வரட்டி' ஆகாது! வடநாட்டு ஸ்டைலில் மிருதுவான சப்பாத்தி இந்த ஒரு ட்ரிக் போதும்!

Chapati
Chapati
Published on

அரிசியில் செய்த டிபன் வகைகள் மாறி கோதுமையில் செய்த சப்பாத்தி (Chapati), பூரி போன்ற காலை உணவுகள் நமது வீட்டில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. சமீப காலமாக வடநாட்டில் இருப்பது போல் சப்பாத்தியுடன் மதிய உணவும் காலை உணவும் பெரும்பாலான வீடுகளில் பழகி விட்டார்கள்.

வடநாட்டு உணவு வகை என்றாலும் அவர்கள் செய்வது போல் நம்மால் மிருதுவான சப்பாத்தியை செய்ய முடியவில்லை என்று சிலர் நினைப்பதுண்டு. ஏனெனில் எப்படித்தான் சப்பாத்தியை செய்தாலும் வரட்டி போல் கடினமாக மாறிவிடுவதை எப்படி சரி செய்வது என்று விதவிதமான வழிகளில் முயற்சித்துப் பார்ப்பார்கள். அந்தக் கவலை இனி இல்லை.

இதோ வடநாடுகளில் செய்யும் இந்த சப்பாத்தி மாவு பிசையும் முறையை வைத்து சப்பாத்தி செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வீடுகளில் உங்களை பாராட்டுவார்கள்.

மிருதுவான சப்பாத்தி செய்ய தேவையானவை:

தண்ணீர் - 2 கப் (250 ml)

கோதுமை மாவு - 3 கப் (அதே கப்பில்)

உப்பு - தேவைக்கு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி அது கொதித்ததும் சலித்து வைத்த கோதுமை மாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது மாவை நன்றாக ஒரு மரக்கரண்டி வைத்து கிளறி விடுங்கள். மாவு நன்றாக சேர்ந்து வந்ததும் அந்த மாவை மூடி போட்டு மூடி விடுங்கள். இந்த அளவு முறை கரெக்டாக இருக்கும் என்பதால் தயவு செய்து கெட்டியாக இருக்கிறதே என்று மறுபடியும் நீரை சேர்க்க வேண்டாம். நன்றாக ஊறியதும் தானாகவே மிருதுவாக மாறிவிடும். (நீரை நீங்கள் மேற்கொண்டு ஊற்றினால் சாப்டான சப்பாத்திக்கு உத்தரவாதம் அல்ல).

இப்போது ஒரு அரை மணி நேரம் கழித்து அந்த சப்பாத்தி மாவை திறந்து பார்த்து கைகளால் நன்றாக பிசைந்து ஒன்று திரட்டி ஒரே உருண்டையாக மாற்றுங்கள். இதற்கு எண்ணெய் நிச்சயம் தேவையில்லை. பத்து நிமிடம் கழித்து சப்பாத்திக்கான உருண்டைகளை அளவாக பிடித்து சப்பாத்திக்கல்லில் சிறிது கோதுமை மாவை தூவி விட்டு அதில் மிக மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து வைத்துக் கொள்ளுங்கள். மிக மெல்லியதாக இருப்பது அவசியம்.

தேவைப்பட்டால் மட்டும் எண்ணெய் இதில் சேர்க்கலாம். ஆனால் எண்ணெய் சேர்க்காமலேயே இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும். முக்கியமாக நீரிழிவு பாதிப்பு, எடை குறைப்பு போன்ற வற்றுக்கு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்.

இப்போது அடுப்பில் தவாவை வைத்து அதிகம் சூடு இல்லாமல் மிதமான சூட்டில் தேய்த்து வைத்த சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுக்கவும். நீங்கள் சரியான விதத்தில் சுடூநீர், மிதமான தீ, சரியான விகிதம் கோதுமை மாவு ஆகியவைகள் இருந்தால் இந்த சப்பாத்தி தானாகவே நன்றாக உப்பி மிருதுவாக வரும். அதுதான் நீங்கள் சப்பாத்தி மாவை சரியாக செய்ததற்கான சான்று.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியத்தின் ரகசியம்: முருங்கைக்காய் தேங்காய்ப் பால் சூப்!
Chapati

இந்த மாவை ஒரு டப்பாவில் அடைத்து குளிர்சாதனப்பட்டியில் வைத்து இரண்டு மூன்று நாட்கள் கூட பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரில் சப்பாத்தி மாவை சேர்ப்பதால் கோதுமை மாவில் உள்ள துகள்கள் நன்றாக வெந்து சப்பாத்திக்கு மிருது தன்மையை கொடுக்கிறது என்பதுதான் இதில் உள்ள ஒரு அறிவியல் காரணம்.

இதையும் படியுங்கள்:
கசப்பு நீக்கப்பட்ட மேத்தியில் சுவையான லசூனி மேத்தி ரெசிபி!
Chapati

நாம் சாதாரணமாக சுடு தண்ணீர் ஊற்றினால் சப்பாத்தி வருமா என்று ஐயப்படுவோம். ஆனால் இதில் முக்கியமான பொருளே நன்றாக கொதிக்கும் நீர்தான் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் கைகளால் அழுத்தி பிசைவதும் சப்பாத்தி மிருது தன்மைக்கு காரணம். அதே போல் அடுப்பு எந்த விதத்தில் எரிகிறது அதாவது அதிக கனலில் (high flame) இல்லாமல் குறைந்த கனலில் சப்பாத்திகளை போட்டு எடுப்பதும் மிருதுவான சப்பாத்திக்கு காரணங்கள்.

இனி உங்கள் வீட்டில் மிருதுவான சப்பாத்தி அனைவரது தட்டுகளிலும் வடநாட்டில் உள்ளது போல்... என்ஜாய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com