
சமையல் என்பது மிகவும் அருமையான கலை. சின்ன சின்ன விஷயங்களைக் கூட கவனமாக செய்ய சமையலை சிறப்பாக்கிவிடும். ரசித்து சுவைக்க இந்த பயனுள்ள குறிப்புகள் உதவும்.
1) சப்பாத்தி ரொம்பவும் மிருதுவாக வர என்ன செய்யலாம்?
சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது மக்காச்சோள மாவையும் சேர்த்து, 1/4 கப் பால் விட்டு பிசைய சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்.
2) பொரியல், கூட்டு செய்யும்பொழுது காரம் அதிகமாகி விட்டால் எப்படி சரி செய்வது?
நான்கைந்து துண்டுகள் ரஸ்க்கை பொடி செய்து தூவிவிட காரம் குறைந்துவிடும்.
3) வீட்டிலேயே வெண்ணெய் எடுக்க அதிக பாலாடைகள் வர என்ன செய்யலாம்?
நன்கு காய்ச்சிய பாலை ஆறவைத்து மூடிபோடாமல் பிரிட்ஜில் வைத்து எடுக்க அதிகளவு பாலாடை கிடைக்கும்.
4) ரவை, பருப்புகளில் வண்டு பிடிக்கிறதே. அதற்கு என்ன செய்யலாம்?
ஒன்றிரண்டு பிரியாணி இலைகளை ரவை, பருப்புகளில் போட்டு வைக்க வண்டு தொல்லை இராது.
5) பலகாரங்கள் செய்யும் பொழுது காய்ச்சிய வெல்லப்பாகு முறிந்து போகிறது. அதை தவிர்க்க என்ன செய்யலாம்?
பலகாரங்களுக்கு வெல்லத்தை பாகு காய்ச்சும் பொழுது பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறை பிழிந்துவிட பாகு முறியாமல் இருக்கும்.
6) காளான்கள் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்வது?
காளான்களை காகிதத்தில் சுற்றி வைக்க நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
7) தேங்காய் இல்லாமல் சட்னி செய்ய முடியுமா?
தாராளமாக செய்யலாம். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய 1 வெங்காயத்தை போட்டு, 4 பச்சை மிளகாய் கிள்ளி சேர்த்து வதக்கவும். சிறிது ஆறியதும் பொட்டுக்கடலை 1/2 கப், உப்பு தேவையான அளவு, சிறிது கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்ட மிகவும் ருசியான சட்னி தயார்.
8) வெங்காய பக்கோடா முறுமுறுப்பாகவும் ருசியாகவும் இருக்க என்ன செய்யலாம்?
பக்கோடாவிற்கு மாவு பிசையும் பொழுது வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடி செய்து மாவுடன் சேர்க்கவும். நாலைந்து பூண்டு, சிறிய துண்டு இஞ்சியை தட்டி போட்டு பிசைந்து செய்ய மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.
9) இட்லி பொடி மணமாகவும், ருசியாகவும் இருக்க என்ன செய்யலாம்?
இட்லி பொடி தயாரிக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தனியா, 1/2 ஸ்பூன் மிளகு, 2 ஸ்பூன் எள் சேர்த்து வறுத்து பொடிக்க மணம், குணம் நிறைந்த இட்லி பொடி தயார்.
10) வாழைக்காய் வாழைப்பூ நறுக்கும்போது கைகள் பிசுபிசுவென்றும் கறுத்துவிடுகிறது. என்ன செய்யலாம்?
இதனை தவிர்க்க கைகளில் சிறிது எண்ணை தடவிக் கொண்டு நறுக்கலாம். நறுக்கி முடித்ததும் சிறிது மோர் கொண்டு கைகளை தேய்த்துக் கழுவ கறையும், பிசுபிசுப்பும் போய்விடும்.
11) கூட்டாஞ்சோறு செய்யும்பொழுது என்னென்ன காய்களை சேர்க்க வேண்டும்?
வாழைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றை சேர்க்கலாம்.
12) சேப்பங்கிழங்கு ரோஸ்ட் மொறுமொறுப்பாகவும் ருசியாகவும் இருக்க என்ன செய்யலாம்?
கடலை மாவை புளித்த தயிரில் கலந்து உப்பு, காரப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து அதில் துண்டுகளாக நறுக்கிய வெந்த சேப்பங்கிழங்கை சேர்த்து பிசிறி பொரிக்க மிகவும் ருசியாகவும் மொறுமொறப்பாகவும் இருக்கும்.
13) வத்த குழம்புக்கு என்ன காய்களை சேர்க்கலாம்?
சுண்டக்காய், மணத்தக்காளி வத்தல்களை நல்லெண்ணெயில் பொரித்து வத்தக் குழம்பில் சேர்க்கவும். கொத்தவரங்காய், கத்தரிக்காய் வத்தல்களை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைத்து குழம்பில் சேர்த்து கொதிக்கவிட மிகவும் ருசியான வத்த குழம்பு தயார்.
14) உருளைக்கிழங்கு சிப்ஸை ருசியாக செய்வது எப்படி?
உருளைக்கிழங்கை தோல் நீக்கி சீவியதும் சிறிது பயத்தம் மாவை தூவி உப்பு, காரம் சேர்த்து செய்ய சிப்ஸ் ருசியாக இருக்கும்.