
எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி தோசை என செய்யாமல் சப்பாத்தி பூரியாக இருந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சப்பாத்தி மென்மையாக வருவதில்லை என்பது ஒரு குறையாக இருக்கும். சப்பாத்தி மிருதுவாக வர என்னதான் ரகசியம்? இப்படி செய்து பாருங்கள்..உங்களுக்கும் பாராட்டு கிடைக்கும்.
ஒரு டம்ளர் கோதுமை மாவுக்கு கால் டீஸ்பூன் உப்பு என கணக்கு வைத்துக்கொள்ளுங்கள். சிறிது மிதமான சூடுகொண்ட வெந்நீரில் தேவையான உப்பு அதில் பாதி அளவு சர்க்கரை இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை அதில் போட்டு நன்கு கலந்த பின் தேவையான தண்ணீர் சிறிது சிறிதாக தெளித்து நன்கு பிசையவும்.
நமது கைகளின் அழுத்தமே மாவு மென்மையாக வருவதற்கான பாதி காரணம் என்பதால் நன்கு அழுத்தம் தந்து சற்று இளக இருக்கும்படி பிசைந்து மேலே சிறிது எண்ணெய் தடவி அதை அட்லீஸ்ட் ஒரு கால் மணி நேரமாவது மூடி போட்டு மூடி விடுங்கள்.
அப்போதுதான் கோதுமைமாவில் நொதித்தல் தன்மை ஏற்பட்டு சப்பாத்தி மிருதுவாக இருக்கும். மீண்டும் சப்பாத்தி செய்யும்போது தேவையான அளவு எடுத்து நன்கு பிசைந்து அதன் பின் உருண்டைகள் பிடித்து சிறிது கோதுமைமாவில் தோய்த்து சப்பாத்திகளாக திரட்டி நன்கு சூடான தவாவில் போட்டு சூடானதும் திருப்பி போட்டு நெய் அல்லது எண்ணெய் தடவினால் சப்பாத்தி மென்மையாக வரும்.
அதேபோல் சப்பாத்திக்கு திரட்டும்போது முதலில் வட்டமாக தேய்த்து அதன் மேல் எண்ணெய் தடவி மடித்து அதை மீண்டும் மடித்து முக்கோணமாக தேய்த்து சுடும் போது சப்பாத்தி இதழிதழாக பிரிந்து குழந்தைகள் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும்.
உருளைக்கிழங்கு கடலெட் கிரேவி
தேவை;
உருளைக்கிழங்கு- 5
கேரட் துருவல்- 1/2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
மிளகாய் வற்றல் - 6
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1/4 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
கசகசா- 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்
தேங்காய் துருவல்- 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
சீரகம்- 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை மல்லித்தழை - சிறிது நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை;
இஞ்சி பூண்டு சுத்தம் செய்து தனியாக அரைத்துக் கொள்ளவும். மிளகாயை வதக்கி மை போல அரைக்கவும். மசாலா சாமான்களை தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும் . உருளைக்கிழங்குகளை வேக முக்கால் பதம் வேகவைத்து மசித்துக் கொண்டு அத்துடன் சிறிது உப்பு, கேரட் துருவல், பொட்டுக்கடலை மாவு, அரைத்த மிளகாய் சிறிது சேர்த்து நன்றாக கலக்கி சிறு சிறு வட்டங்களாக ஆக்கி அதை நெய் தடவிய இட்லி தட்டுகளில் வைத்து ஆவியில் வேகவிடவும்.
நன்றாக ஆறிய பின் தனியாக எடுத்து கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் இஞ்சி பூண்டு போட்டு நன்கு வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலா சாமான்கள் தேவையான உப்பு மஞ்சள் தூள் போட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவிடவும்.
அப்போதுதான் தனியாவின் வாசம் போகும் . பின் கலவையை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி நாம் ஏற்கனவே வேவித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கட்லட்களை அதில் போட்டு சிறிது நேரம் ஊறியதும் எடுத்து பரிமாறலாம். இந்த கட்லட் குழம்பு பூரி சப்பாத்திக்கு வெகு வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.
தக்காளி உருளைக்கிழங்கு குருமா
தேவை;
உருளைக்கிழங்கு - 5
தக்காளி- ஐந்து
சின்ன வெங்காயம் - 1 கப் (உரித்தது) தேங்காய்ச்சில் - தேவைக்கு
சோம்பு- 1/4 டீஸ்பூன்
கடுகு உளுந்து- தாளிக்க
கறிவேப்பிலை- சிறிது
பச்சை மிளகாய் - 5
பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தாளிக்கத் தேவையானது.
செய்முறை;
உருளையை முக்கால் பதமாக வேகவைத்து உரித்து ஆறியதும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை நன்கு நீளமாக வெட்டிக்கொள்ளவும். தக்காளிகளை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து, சோம்பு சேர்த்து தாளித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி பின் தக்காளி விழுது போட்டு நன்கு வதக்கி தேங்காய் பால் விட்டு ஒரு கொதி வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு இறக்கும்போது கரைத்த பொட்டுக்கடலை மாவை தூவி கெட்டியானதும் இறக்கவும்.
இதில் தேங்காய் பாலுக்கு பதில் தேங்காயை அரைத்தும் போடலாம். விரும்பினால் கறி மசாலா பொடி அரை டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் இந்த தக்காளி உருளைக்கிழங்கு குருமா சப்பாத்திக்கு ஏற்ற குழந்தைகளும் விரும்பும் சைடு டிஷ் ஆக இருக்கும்.