சீஸ் மசாலா மைசூர் தோசை
Cheese masala Mysore dosa

சூப்பர் சுவையில் சீஸ் மசாலா மைசூர் தோசை செய்யலாம் வாங்க! 

Published on

தென்னிந்தியாவில் தோசை என்பது மிகவும் பிரபலமான உணவு. இதைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் மசாலா தோசை அனைவருக்குமே பிடிக்கும். மசால் தோசையில் சீஸ் சேர்த்து செய்யப்படும் ஒரு வகையான தோசை, உணவுப் பிரியர்களின் இதயத்தை கொள்ளைகொள்ளும் ஒரு சிறந்த உணவு. இதில் சீஸ் சேர்க்கப்படுவதால் அதன் சுவை சூப்பராக இருக்கும். இந்தப் பதிவில் சீஸ் மசாலா மைசூர் தோசை எப்படி வீட்டிலேயே எளிதாக செய்வது எனப் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

தோசை மாவு:

  • அரிசி - 1 கப்

  • உளுந்தம் பருப்பு - 1/4 கப்

  • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

மசாலா:

  • வெங்காயம் - 1

  • பச்சை மிளகாய் - 2

  • கேரட் - 1/2

  • தக்காளி - 1

  • சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

  • கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி

  • கொத்தமல்லி தழை - சிறிதளவு

  • எண்ணெய் - தேவையான அளவு

சீஸ்:

  • மொசரெல்லா சீஸ் அல்லது செடார் சீஸ் - 1/2 கப்

  • நெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் தோசை மாவு தயாரிப்பதற்கு அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை தண்ணீரில் சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், இவற்றை மிக்ஸியில் நைசாக அரைத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். 

அடுத்ததாக மசாலா தயாரிக்க வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும். பின்னர், அதில் தக்காளி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இறுதியில் கொத்தமல்லித் தழை தூவி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
பன்னீர் தோசை தெரியும். பன் தோசை சாப்பிட்டு இருக்கீங்களா?
சீஸ் மசாலா மைசூர் தோசை

இப்போது ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும், அதில் நெய் தடவி புளித்த தோசை மாவை அதில் ஊற்றி மெலிதாகப் பரப்பவும். தோசை ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மசாலா தடவி, துருவிய சீஸ் தூவி மூடி வைக்கவும். சீஸ் நன்றாக உருகியதும் தோசையை மடித்து பரிமாறவும். 

தோசை மாவு அரைக்கும்போது அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதில் சீஸுக்கு பதிலாக பனீர் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் பிடித்த தின்பண்டங்கள் சேர்த்தும் செய்யலாம். தோசையை சூடாக சாப்பிடும்போது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும். இந்த ரெசிபியை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com