பீட்சாவே தோத்துடும்… வடசென்னை மக்களின் 100 வருட சீக்ரெட் 'அட்லாப்பம்' செய்முறை இதோ!

Atlappam
Atlappam
Published on

வடசென்னையின் அடையாளங்களில் ஒன்று காசிமேடு. அங்கு கிடைக்கும் மீன்களைத் தாண்டி, கடந்த சில வருடங்களாகவே உணவுப் பிரியர்களைக் காந்தம்போல ஈர்த்து வருவது ‘அட்லாப்பம்’ (Atlappam) எனப்படும் பாரம்பரிய உணவு. சுமார் 200 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த உணவை 'காசிமேடு பீட்சா' என்றே பலர் அன்போடு அழைக்கிறார்கள். 

கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு அதிகாலையிலேயே நல்ல ஆற்றலைக் கொடுப்பதற்காக உருவானதுதான் இந்த சுவையான உணவு. வழக்கமாக அட்லாப்பம் மாவில் முட்டை சேர்த்துச் செய்வார்கள். ஆனால், முட்டை சாப்பிடாத சைவப் பிரியர்களும் இந்த அட்டகாசமான சுவையை ருசிக்க வேண்டாமா? அதற்காகவே, முட்டைக்குப் பதிலாக சில எளிய மாற்றங்களைச் செய்து, அசலான சுவை சற்றும் குறையாத 100% "வெஜ் அட்லாப்பம்" எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு - 1 கப்

  • வறுத்த ரவை - 1/2 கப்

  • சர்க்கரை அல்லது நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்

  • கெட்டித் தயிர்  - 1/4 கப்

  • தேங்காய் துருவல் - 1/2 கப்

  • வறுத்த கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய்த் தூள், சீரகப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி - தலா 1/2 டீஸ்பூன்

  • முந்திரி, உலர் திராட்சை - தலா 10

  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • பேக்கிங் சோடா - 1 சிட்டிகை

  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை!

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சரிசி மாவு, வறுத்த ரவை, சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து கொள்ளவும். அட்லாப்பத்தின் தனித்துவமான வாசனையே அதில் சேர்க்கப்படும் மசாலாக்களில்தான் இருக்கிறது. எனவே, ஏலக்காய்த் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிதளவு ஜாதிக்காய்ப் பொடியை அந்த மாவில் தூவிவிடுங்கள். 

இப்போது, முட்டைக்குச் சரியான மாற்றாகச் செயல்பட்டு மாவை மிருதுவாக்கக் கூடிய கெட்டித் தயிரை இதில் சேர்க்க வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வாகரேவாரேவா- WHAKAREWAREWA: சுடச்சுட பீறிட்டு எழுந்த உலகின் அதிசய வெந்நீர் ஊற்றுக்கள்! மலைத்து நின்ற மாவோரி மக்கள்!
Atlappam

அடுத்ததாக, அடுப்பில் ஒரு சிறிய தாளிப்புக் கரண்டியை வைத்து தாராளமாக நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதோடு நிறுத்தாமல், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கடலைப்பருப்பையும் நெய்யிலேயே லேசாக வறுத்து, நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாகக் கலந்து விடவும். கடைசியாக, மாவு உப்பி வருவதற்காக ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து மெதுவாகக் கலக்குங்கள். இப்போது அட்லாப்பம் செய்வதற்கான அருமையான மாவு தயார்.

பாரம்பரியமாக இதை மணல் பரப்பிய சட்டிக்கு மேல் நெருப்புக்கங்குகளை வைத்து வேகவைப்பார்கள். ஆனால், வீட்டில் நாம் அடி கனமான பேன் பயன்படுத்தலாம். ஒரு பேனில் நெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றுங்கள். அடுப்பை முற்றிலும் சிம்மில் வைத்து, ஒரு மூடியால் காற்று புகாதவாறு மூடிவிட வேண்டும். 

சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் பொறுமையாக வேக விடுங்கள். மாவு வெந்து, ஓரங்களில் பொன்னிறமாகச் சிவந்து வரும்போது ஒரு டூத்பிக் அல்லது கத்தியால் குத்திப் பாருங்கள். மாவு ஒட்டாமல் வந்தால், அடுப்பை அணைத்து விடலாம். ஓவன் பயன்படுத்துபவர்கள் 180°C வெப்பநிலையில் 30 நிமிடங்கள் பேக் செய்தும் எடுக்கலாம்.

இதையும் படியுங்கள்:
சுடச்சுட சாதத்திற்கு ஏற்ற மணக்கும் அவரைக்காய் புளிக்குழம்பு!
Atlappam

சுடச்சுட வெந்து வந்திருக்கும் இந்த வெஜ் அட்லாப்பத்தை முக்கோண வடிவில் பீட்சா போல வெட்டிப் பாருங்கள். மேல்பகுதி நல்ல மொறுமொறுப்பாகவும், உட்புறம் கேக் போல பஞ்சு போன்றும் இருக்கும். ஒவ்வொரு வாய்க்கும் இடையில் சிக்கும் முந்திரி, கடலைப்பருப்பு, தேங்காயின் சுவையோடு நெய்யின் மணமும் சேர்ந்து உங்களை வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்லும். 

இந்த வீக்கெண்டில், ஈவினிங் டீயுடன் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்தக் காசிமேடு ஸ்பெஷல் வெஜ் அட்லாப்பத்தைச் செய்து கொடுத்து அசத்துங்கள். நிச்சயம் அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்பார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com