

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம், "காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?" என்று கேட்டால் இட்லி, சாம்பார் என்று சொல்லாதவர்கள் இருக்க முடியாது. அந்த 'சாம்பார் 'என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக கூறுகின்றனர். மசாலா பொருட்களை அரைத்து சேர்ப்பதற்கு 'சம்பாரம்' என்று பெயர் உண்டு. அதனாலேயே `சாம்பார்` எனப் பெயர் பெற்றது.
தஞ்சையை ஆண்ட மராட்டியர்களின் அரண்மனையில் 300 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது முதல் சாம்பார் என சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சாம்பார் பழமையாக இருந்தாலும் புதுமையாக இருந்தாலும் இட்லிக்கு சரியான ஜோடி என்பதில் மாற்று கருத்து கிடையாது.
அந்த சாம்பார் பல்வேறு ஊர்களில் பலவிதமாக வைக்கப்படுகின்றன. அந்த வகையில் அசைவ உணவுக்கு பெயர் பெற்ற செட்டிநாடு பகுதிகளில் தயாரிக்கப்படும் "செட்டிநாடு சாம்பார்' குறித்து இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - அரை கப்
தக்காளி -2 (பொடியாக நறுக்கியது)
தோலுரித்த சின்ன வெங்காயம் - 10
கேரட் - ஒன்று (சதுர துண்டுகளாக நறுக்கியது)
முருங்கைக்காய் - ஒன்று (விரல் நீள துண்டுகள்)
பீன்ஸ் - 7 (ஒரு இன்ச் அளவு துண்டுகள்)
புளி - எலுமிச்சை அளவு
செட்டிநாடு சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குக்கர் அல்லது பாத்திரத்தில் குழைய வேக விடவேண்டும். ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி தனியாக வைக்கவேண்டும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவற்றை நன்கு உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் விட்டு வேகவிட வேண்டும். அப்பொழுதுதான் காய்களில் உப்பு பிடித்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
சிறிது நேரத்தில் காய்கள் வெந்த பிறகு அதனுடனேயே சாம்பார் பொடி, புளி கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட வேண்டும்.
இந்த நேரத்தில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் சேர்த்து கிளறிவிடவும். பிறகு ஒரு கொதிவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்க சுவையான 'செட்டிநாடு சாம்பார்" தயார். இட்லி, சாதம் இரண்டிற்கும் அருமையாக இருக்கும்.
செட்டிநாடு சாம்பார் பொடி செய்முறை
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - அரை கிலோ
மல்லி (தனியா) -ஒரு கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
துவரம்பருப்பு - 100 கிராம்
உளுத்தம்பருப்பு - 100 கிராம்
பச்சரிசி - 50 கிராம்
சோம்பு - 25 கிராம்
சீரகம் - 50 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
மிளகு - 50 கிராம்
மஞ்சள் - 25 கிராம்
பொடி தயாரிக்கும் முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சிறிய தீயில் மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பிறகு ஆறியவுடன் மெஷினில் நைசாக அரைத்து பொடியை பேப்பரில் பரப்பி ஆறவைத்தால் `செட்டிநாடு சாம்பார்` பொடி தயார். இதனைக்காற்று புகாத கொள்கலனில் சேமித்து ஆறுமாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கால் கப் துவரம் பருப்பிற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி பயன்படுத்தினால் சாம்பார் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் பொடியை காரக்குழம்பு, கூட்டு, மசாலா வகைகள், பொரியல், பச்சடி என சைவ சமையலிலும், அசைவ சமையலிலும் பயன்படுத்தி அசத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவின் மூலம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பும் பாரம்பரிய செட்டிநாடு சாம்பாரை அதன் மாறாத சுவையோடும், மணத்தோடும் மிக எளிதாகச் சமைத்து அசத்த முடியும். மேலும், 6 மாதங்கள் வரை கெடாத சிறப்புச் சாம்பார் பொடியை நீங்களே சொந்தமாக தயாரித்து தினசரி சமையலை சுவையாக்கலாம்.