குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் உடனடியாக செய்து கொடுக்க இந்த வகை ரெசிபிகளை ட்ரை பண்ணி பாருங்க!
ரங்கூன் புட்டு:
தேவையான பொருள்கள்:
ரவை- 1 கப்
தேங்காய் துருவல்-1 கப்
வெல்லம்-1 கப்
நெய் -8 டேபிள்ஸ்பூன்
முந்திரி- தேவையான அளவு
திராட்சை- தேவையான அளவு
ஏலக்காய் தூள்-1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஒரு அகலமான வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி மற்றும் திராட்சைகளை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதே வாணலியில் மேலும் சிறிதளவு நெய்சேர்த்து தேங்காய் துருவலை கொட்டி ஈரப்பதம் போகும்வரை மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லத்தை எடுத்து அதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து ரவையை கொட்டி மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அந்த ரவையுடன் கரைத்து வைத்த வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கலந்து விடவும். ரவை ஓரளவுக்கு கெட்டியாக மாறியவுடன் அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்தூள் மற்றும் வறுத்த தேங்காய் சேர்த்து நன்கு கலந்துவிட்டு மிதமான சூட்டில் 5 நிமிடம் வேகவைக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு மீதமுள்ள நெய்யை அதனோடு சேர்த்து நன்கு கிளறி எடுத்தால் சுவையான ரங்கூன் புட்டு ரெடி!
ரவை பக்கோடா:
தேவையான பொருள்கள்:
ரவை-1 கப்
கடலை மாவு -3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -3
பெரிய வெங்காயம்-2
இஞ்சி-1 துண்டு
சீரகம்-1/2 டேபிள்ஸ்பூன்
கெட்டியான தயிர்-1/4கப்
நறுக்கிய மல்லி இலை -1 கைப்பிடி கருவேப்பிலை - சிறிதளவு
சோடா உப்பு-1/4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
ஒரு உரலில் பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு, அதனுடன் கடலை மாவு, கெட்டித் தயிர், நறுக்கிய வெங்காயம், இடித்து வைத்த கலவை, சோடா உப்பு, நறுக்கிய மல்லி இலை மற்றும் கறிவேப்பிலை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து எடுத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை 10 நிமிர்த்து 15 நிமிடம் ஊறவைத்து எடுக்கவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் ஊறவைத்த மாவை எடுத்து பக்கோடா பதத்திற்கு போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுத்தால் காரசாரமான மொறு மொறுப்பான ரவை பக்கோடா ரெடி!
மாலை நேரத்தில் டீ மற்றும் காபியுடன் சேர்ந்து சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும்!