

உலகம் முழுவதும் சமையலறைப் பயன்பாட்டில் பயன்படுத்தும் காய்கறிகளில் கார சுவைக்குப் பயன்படுத்தப்படும் மிளகாய் (Capsicum) என்பது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது மொளகாய், முளகாய் என்றும் அழைக்கப்படுகிறது. காரத்தை அதிகரிக்க உணவில் மட்டுமின்றி, மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக, ஈக்குவடாரில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியினைச் சேர்ந்தவர்களே முதலில் சமையலில் மசாலாவைச் சேர்த்திருக்கின்றனர் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் குடை மிளகாய், பிமென்டோ மிளகாய், ரெல்லானோ மிளகாய், இனிப்பு பனானா மிளகாய், பொப்பிலானோ/ஆன்சோ மிளகாய், பெர்முடா கார மிளகாய், ஆர்டேகா மிளகாய், பப்பிரிகா மிளகாய், கார பனானா மிளகாய், ரோகோடில்லோ மிளகாய், அலபீனோ மிளகாய், கயன் மிளகாய், டபாஸ்கோ மிளகாய், செர்ரானோ மிளகாய், சில்டிபின் மிளகாய், ஆபெர்னரோ மிளகாய், ரொகோடோ மிளகாய், தாய்லாந்து மிளகாய் என்று பல வகைகள் இருக்கின்றன. இந்தியாவில் சன்னம் மிளகாய், எல் சி 334 மிளகாய், படகுமிளகாய், காரமிளகாய், ஜுவலா மிளகாய் போன்றவை அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மிளகாய், நீளமானவை, குறுகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமானவை என பல்வேறு வடிவங்களில் இருக்கின்றன. இம்மிளகாய்கள் அனைத்தும் காரத் தன்மையில் வேறுபடுகின்றன.
உலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த அதிலிருக்கும் காரத்தன்மையின் அளவைக்கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. மிளகாயின் காரத்தன்மையினைக் கண்டறிய சுகோவில் (Scoville) எனும் அளவுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சுகோவில் அளவைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டிருக்கும் மிளகாய்கள் இவைதான்;
இனிப்பு மிளகாய்
இனிப்பு வகை மிளகாய்களின் காரத்தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை.
மிதமான கார மிளகாய்
மிதமான கார வகை மிளகாய்களின் காரத்தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை.
இடைப்பட்ட கார மிளகாய்
இடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத்தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இவ்வகையைச் சார்ந்தவை.
கார மிளகாய்
கார வகை மிளகாய்களின் காரத்தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் இவ்வகையைச் சார்ந்தவை.
அதீத கார மிளகாய்
அதீத கார வகை மிளகாய்களின் காரத்தன்மை 80,000 முதல் 3,00,000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு என்பவை இவ்வகையைச் சார்ந்தவை.
பொதுவாக, சிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும், சிறிய அளவிளான கரோடீன் (carotene) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.
காரத்திற்காக பச்சை மிளகாய் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதிகக் காரமில்லாமல், இனிப்பு மிளகாயாக இருக்கும் குடை மிளகாய், அழகியல் நோக்குடன் பல்வேறு உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிவப்பு, மஞ்சள், பச்சை, செம்மஞ்சள் (ஆரஞ்சு) போன்ற நிறங்களில் இக்குடை மிளகாய்கள் கிடைக்கின்றன. குடை மிளகாய்ச் செடிகள், மெக்சிக்கோ, நடு அமெரிக்கா தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையாக விளைகின்றன. குடைமிளகாய்ச் செடியின் விதைகளை 1493 ஆம் ஆண்டில் ஸ்பெயினுக்கு எடுத்துச்சென்று பயிரிட்டனர். அதனைத் தொடர்ந்து, ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் பரவியது.
உலகில் அதிகமாகக் குடைமிளகாய் பயிரிடும் நாடுகளின் இன்றும் மெக்சிக்கோ முன்னணியில் இருக்கிறது. இந்தியாவிலும், குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கான உணவுகளில் குடை மிளகாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.