

வெயில் காலம் தொடங்கிவிட்டது. சாதாரணமாகவே ஐஸ்கிரீம் விரும்பி சாப்பிடும் குழந்தைகள் இந்த வெயில் காலத்தில் இன்னும் அதிகமாக கேட்பார்கள். ஆனால் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்பதால் அதிகம் வாங்கித்தர மாட்டோம்.
ஆனால் அவர்களை சமாளிப்பது கடினம் என்பதால் வீட்டிலேயே எப்படி ஐஸ்கிரீம் செய்து கொடுப்பது என்று பார்ப்போம்.
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான ஐஸ்கிரீமை வீட்டிலேயே கிரீமியான தேங்காய் ஐஸ்கிரீமாக செய்து கொடுத்து அசத்தலாம். சுவை அலாதியாக இருக்கும்..!
இப்போது எல்லாம் நாம் வீட்டிலேயே பல புதிய வகை டிஷ்களை செய்து பார்க்கிறோம். அதோடு இந்த தேங்காய் ஐஸ்கிரீமையும் ட்ரை பண்ணிப்பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேங்காய் ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் துண்டுகள் – 3/4 கப்
(தேங்காயின் மென்மையான வெள்ளை பகுதி மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்)
தேங்காய் தண்ணீர் – 1/4 கப்
தேங்காய் பால் – 1/2 கப்
விப்ட் க்ரீம் – 1 கப்
பால் – 1/3 கப்
வெண்ணிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
இளநீர் வழுக்கை துண்டுகள் – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பு வகைகள் 1 கப்
தேன் தேவையான அளவு
செய்முறை:
முதலில், ஒரு மிக்ஸி ஜாடியில் தேங்காய் துண்டுகள் மற்றும் 1/4 கப் தேங்காய் தண்ணீரை சேர்க்கவும். அதை மென்மையான பேஸ்ட் போல அரைக்கவும்.
இப்போது அரைத்த பேஸ்டுடன் தேங்காய் பால் மற்றும் பால் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலக்க மீண்டும் லேசாக மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு தனி பெரிய கிண்ணத்தில் 1 கப் குளிர்ந்த விப்ட் க்ரீமை எடுத்து, அதன் அளவு இரட்டிப்பாகும் வரை நன்கு பீட் செய்யவும். தயாரிக்கப்பட்ட தேங்காய் கலவையை விப்ட் க்ரீமில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்யவும். அதோடு வெண்ணிலா எசன்ஸையும் சேர்க்கவும்.
கலவை நன்கு கலந்தவுடன், இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வழுக்கை துண்டுகளை சேர்க்கவும். இந்த துண்டுகளை மென்று சாப்பிடும்போது ஐஸ்கிரீமின் சுவை அதிகரிக்கும்.
முந்திரி பாதாம் பிஸ்தா பருப்பு வகைகளை நன்கு பொடித்துக் கொள்ளவும். அனைத்தும் நன்கு மிக்ஸ் ஆனதும் அதை காற்று புகாத டப்பாவில் ஊற்றவும். அதன் மேல் பொடித்த நட்ஸ்களை தூவி நன்கு பரப்பிவிடவும்.
அதன் மேல் பட்டர் ஷீட் அல்லது கவர் வைத்து மூடவும். இதனால் மேலே ஐஸ் கட்டி படியாமல் இருக்கும். இப்போது அதை ஃப்ரீசரில் வைக்கவும். குறைந்தபட்சம் 7–8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைக்கவும். மறுநாள் எடுத்துப் பார்த்தால் சுவையான தேங்காய் ஐஸ்கிரீம் ரெடி.
பரிமாறும்போது ஐஸ்கிரிமின் மேல் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பரிமாறவும்.
வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜில்லுன்னு சாப்பிடலாம். அசத்தலான சுவையுடன் இருக்கும்.