
உலகம் முழுவதும் வைரலாகிக் கொண்டிருக்கும், கொரிய மக்கள் 1970 லிருந்தே அருந்தி வரும் 'பனானா காபி' தயாரிப்பது எப்படி தெரியுமா?
காபி மற்றும் டீ வகைகளில் பல விதத்தில் மாற்றங்களை உண்டு பண்ணி, வேறுபட்ட சுவையில் அவற்றைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் ஹோட்டல் உரிமையாளர்கள். சமீப காலத்தில், இவ்வகை பானங்களின் வரிசையில் ட்ரெண்டிங்காக சேர்ந்து உலக அளவில் பிரசித்தமாகியுள்ளது 'பனானா காபி'.
1970 ல் தென் கொரிய மக்களால் உருவாக்கப்பட்டது இது. அப்போதைய அரசாங்கம், பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், போருக்குப் பின் வந்த வருடங்களில் மக்களுக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்துக்களின் அளவு அதிகரிக்கவும் இந்த பனானா காபியை அறிமுகம் செய்தது.
பனானா எப்படி காபியுடன் சிறந்த முறையில் இணக்கமானது?
இயற்கை முறையில் நன்கு பழுத்த வாழைப்பழங்களில் உள்ள இனிப்புச் சத்து, காபியின் ஸ்ட்ராங் மற்றும் சிறிது கசப்பு சுவையுடன் கலந்து, ஒருங்கிணைந்ததொரு சமநிலையுற்ற பானத்தை தர உதவுகிறது. சுவையைத்தாண்டி, பனானா காபியை ஓர் ஆரோக்கியம் நிறைந்த பானமாக்கவும் வாழைப்பழம் உதவுகிறது. இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவி புரிகின்றன.
காபி பீன்களுடன், ஆரஞ்சு அல்லது செரி போன்றதொரு பழம் சேரும்போது, ஒன்று மற்றொன்றின் சுவையைக் கூட்ட உதவும். பனானா காபியும் அதேமாதிரி காபியின் சுவையைக் கூட்டுவதாகவும், பழமையை நினைவூட்டக் கூடியதாகவும், நவீன காலத்தவர்களுக்கு புத்துணர்ச்சியளிக்கும் பானமாகவும் விளங்குகிறது.
வீட்டில் பனானா காபி தயாரிக்கும் முறை:
பனானா காபியை வீடுகளில் இரண்டு முறைகளில் தயார் செய்யலாம்.
மிக எளிதில் விரைவாக செய்யக்கூடியது ஐஸ்ட் லாட்டே. இதற்கு எஸ்பிரஸ்ஸோ இயந்திரம் தேவையில்லை. ஒரு மேசன் ஜாரில் (Mason Jar) இரண்டு டேபிள் ஸ்பூன் தரமான இன்ஸ்டன்ட் காபி தூள் சேர்த்து, கொதிக்கும் நீரை அதன் மீது ஊற்றிக்கலக்க கட்டிகள் கரைந்து ஸ்மூத்தான காபி கரைசல் கிடைக்கும். அதனுடன் ஒரு கை ஐஸ் க்யூப் மற்றும் 355 ml அளவு பனானா மில்க் சேர்த்த பின், ஜாரை மூடியால் இறுக மூடவும். பின் ஜாரை நன்கு குலுக்கவும். ஐஸ் கட்டிகள் கரைந்து, மூன்று பொருட்களும் ஒன்றிணைந்து நுரைத்து வரும். இதுவே பனானா ஐஸ்ட் லாட்டே.
க்ளாசிக் ஐஸ்ட் லாட்டே: எஸ்பிரஸ்ஸோ இயந்திரத்தி லிருந்து, விருப்பப்பட்ட காபிக் கொட்டையில் தயாரிக்கப்பட்ட டிக்காஷனை இரண்டு ஷாட் இழுத்து விடவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். பின் ஐஸ் க்யூப் போடவும். கடைசியாக பனானா மில்க் ஊற்றிக் கலக்கவும். சரியான டெக்சரில் சுவையான, புத்துணர்வூட்டும் க்ளாசிக் ஐஸ்ட் லாட்டே ரெடி. சூடான மதியவேளைகளில் அல்லது டின்னருக்குப் பின் அருந்துவதற்கு ஏற்ற பானம்.
இதன் தயாரிப்பில் உள்ள எளிமையே பனானா காபியை விரைவில் உலகம் முழுவதும் பரவச் செய்துள்ளது எனலாம். நீங்களும் பனானா காபியை வீட்டில் தயாரித்து குடித்து மகிழுங்களேன்!