
கோதுமை ரவை தோசை
தேவை:
கோதுமை ரவை - 2 கப் இட்லி அரிசி - 2 கப்
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கோதுமை ரவை, இட்லி அரிசி இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைத்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து ஒருமணி நேரம் புளிக்க வைக்கவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் தோசையைத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும். அல்டிமேட் சுவையில் கோதுமை ரவை தோசை ரெடி. இதற்கு உளுந்து தேவையில்லை.
********
கோதுமை ரவை பாயசம்
தேவை:
கோதுமை ரவை - அரை கப்,
நெய் - 3 ஸ்பூன்,
பால்- 1 கப்,
பொடித்த வெல்லம்- 1½ கப்,
திராட்சை,
முந்திரி தலா- 10,
ஏலப்பொடி- அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு, அதிலேயே கோதுமை ரவையைச் சிறிது வறுத்து, பின் பாலும் நீரும் சேர்த்து வேகவிடவும். குழைய வெந்ததும், பொடித்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கிவைத்து, ஏலப்பொடி முந்திரி, திராட்சை சேர்க்கவும். சுவையான கோதுமை ரவை பாயசம் தயார்.
*******
கோதுமை ரவை கொழுக்கட்டை
தேவை:
கோதுமை ரவை – ஒரு கப், வேகவைத்த சென்னா – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, முந்திரிப் பருப்பு – 8.
செய்முறை:
தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, 2 கப் நீர் சேர்த்து, கொதி வந்தவுடன் உப்பு, கோதுமை ரவை, வேகவைத்த சென்னா சேர்த்து, பாதி வெந்தவுடன் இறக்கவும். ஆறியபின் மாவை நீளவாக்கில் உருட்டி இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சுவையான சத்தான கோதுமை ரவை கொழுக்கட்டை தயார்.
******
கோதுமை ரவை அல்வா
தேவை:
கோதுமை ரவை - 1 கப்,
நாட்டுச் சர்க்கரை - 1 கப்,
துருவிய வெல்லம் - 1 கப்,
நெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்,
முந்திரி - 10.
செய்முறை:
கடாயில் நெய்விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவைக்கவும். நன்கு கொதிக்கும்பொழுது கோதுமை ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் கிளறி வேகவிடவும். மற்றொரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரை, வெல்லத்துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, அதை கோதுமை ரவை கலவையில் கொட்டி கிளறவும். இத்துடன் நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி அனைத்தையும் சேர்த்து அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவை மிக்க கோதுமை ரவை அல்வா ரெடி.