கேஸ் சிலிண்டர் இல்லையா? கவலை வேண்டாம்! அடுப்பில்லாமல் சமைக்க இதோ 14 சூப்பர் ஐடியாக்கள்!

Cook without gas
Cook without gas
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கேஸ் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் அடுப்பில்லா சமையலாக (No-Stove Cooking) செய்து அசத்தலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் முன்பதிவு செய்த பிறகும் சிலிண்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஹோட்டல்களும் வரிசையாக மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்காலிக நெருக்கடிகளை சமாளிக்க மக்கள் மாற்று வழிகளை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.

1) முடிந்தவரை மின்சார அடுப்புகள், சோலார் குக்கர்கள், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர் மற்றும் இண்டக்ஷன் அடுப்பை பயன்படுத்தி அரிசி, பருப்பு, குழம்பு, பொரியல், சூப் போன்றவற்றை சமைக்கலாம். முளைகட்டிய பயறு சாலட், பழச்சாறுகள், ஸ்மூத்திகள், காய்கறி சாலட்டுகள், தேங்காய் கொண்டு செய்யப்படும் பச்சை உணவுகள் செய்வதற்கு கேஸ் அடுப்பு தேவையில்லை.

2) மதிய உணவுக்கு மைக்ரோ ஓவனில் உருளைக்கிழங்கு வேக வைக்கலாம். சாண்ட்விச் கேக் மற்றும் பிரவுனி செய்யலாம்.

3) மின்சாரக் கெட்டிலில் வெந்நீர் போடவும், உடனடி நூடுல்ஸ் மற்றும் டீ, காப்பி தயாரிக்கவும் உபயோகிக்கலாம்.

4) இயற்கை சமையல் (No-Oil, No-Boil): காய்கறிகள், முளைகட்டிய பயறுகள், தேங்காய் மற்றும் பழங்களை உடனுக்குடன் வெட்டி, எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம்.

5) பருப்பு காய்கறி கோசுமல்லி: பயத்தம் பருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து அதில் கேரட் துருவல், வெள்ளரித் துருவல், பீட்ரூட் துருவல், எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி, உப்பு சேர்த்து கலந்து சாப்பிடலாம்.

6) சத்தான லட்டு: பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழத் துண்டுகள், உலர் திராட்சை, பொடித்த முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா துண்டுகள், தேங்காய்த்துருவல், சிறிதளவு தேன் ஆகியவற்றை அகலமான பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து லட்டுகளாக பிடிக்கவும். இவற்றை செய்து சேமித்து வைக்க முடியாது. தேவைப்படும் சமயம் எல்லாவற்றையும் கலந்து லட்டுகளாக பிடிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
நாவூறும் நளபாகம்: கோடை ஸ்பெஷல் மாங்காய் சாதம் மற்றும் கசப்பில்லா பாகற்காய் சாதம்!
Cook without gas

7) பழக்கலவை: சீசன் பழங்களுடன் தேன் அல்லது நட்ஸ் கலந்து சாப்பிடலாம்.

8) பச்சை புளிக்குழம்பு: பச்சை மிளகாய் 2, தேங்காய்த் துருவல்1 ஸ்பூன், பூண்டு 2, சின்ன வெங்காயம் 4, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து, நீர்க்கக் கரைத்த புளித் தண்ணீரில் போட்டு கையால் நன்கு கசக்கி விடவும். புளித்தண்ணீரில் உப்பு காரம் இறங்கி மிகவும் ருசியாக இருக்கும். விருப்பப்பட்டால் சிறிது நல்லெண்ணையில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக்கொட்டலாம்.

9) அவல் இனிப்பு: கேஸ் உதவி இல்லாமலே காலை உணவை சுவையாக தயாரிக்கலாம். அவலை சுத்தமான நீரில் ஊறவைத்து பிழிந்து எடுத்து அத்துடன் தேங்காய்த்துருவல், நாட்டுச்சக்கரை, பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட சுவையாகவும் இருக்கும் உடனடி ஆற்றலையும் வழங்கும்.

10) மிக்ஸட் வெஜிடபிள் அவல்: அவலை சுத்தமான நீரில் களைந்து இரண்டு நிமிடம் ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். அத்துடன் கேரட், வெள்ளரிக்காய், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், சிறிது தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும். மேலாக தோல் நீக்கிய வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்து சேர்க்க மிகவும் ருசியாக இருக்கும்.

11) தயிர் அவல்: அதிக புளிப்பில்லாத கெட்டித்தயிரில் ஊறவைத்த அவலை சேர்த்து உப்பு, மிளகு பொடி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மாதுளை முத்துக்கள் சில சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

12) ஆரோக்கிய சாலட்: காய்கறிகளை பொடியாக நறுக்கி தேங்காய், எலுமிச்சை சாறு மற்றும் வேர்க்கடலையை ஒன்றிரெண்டாகப் பொடித்து சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாலட் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
ரெஸ்டாரன்ட் சீக்ரெட் லீக் ஆனது... 'கார்லிக் மஷ்ரூம்' - 10 நிமிஷத்துல ரெடி!
Cook without gas

13) புரத சாலட்: அதேபோல் காலை உணவுக்கு முளைகட்டிய தானியங்களை பச்சையாகவே விரும்பிய காய்கறிகளுடன் உப்பு, எலுமிச்சை சாறு கலந்து உண்ணலாம்.

14) சோள சுண்டல்: அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் ஒரு கப், தேங்காய் பொடியாக நறுக்கியது, அதிகம் புளிப்பில்லாத மாங்காய்த் துண்டுகள், வெள்ளரித் துண்டுகள், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை சிறிது, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com