
அன்று சமையல் என்பது ஒரு கலையாக மதிக்கப்பட்டது. சமைப்பவரின் இதயம் மகிழ்ச்சியாக இருந்தால் உண்பவரின் வயிறு நிறைந்து ஆரோக்கியம் உண்டாகும் என்ற கருத்தும் உண்டு.
எந்த ஒரு விஷயத்தையும் ரசித்து செய்தால் அது சிரமமாகவே இருக்காது. நாம் 'இஷ்டப்பட்டு செய்யும் எதுவும் கஷ்டமே இல்லை'. சமையலும் அப்படித்தான். சரி நாங்கள் இஷ்டப்பட்டு சமைக்க ரெடி. ஆனால் நேரத்தை மிச்சப்படுத்தும் ஐடியாக்கள் தாருங்களேன் என்கிறீர்களா..?
இதோ உங்களுக்காகவே நேரத்தை மிச்சப்படுத்த சில சமையல் குறிப்புகள் இங்கே…
உணவு தயாரிப்பு
நாளை என்ன செய்யப்போகிறோம் என தீர்மானித்து முன்கூட்டியே அதற்கான காய்கறிகள் மற்றும் வெங்காயம் போன்ற பிற பொருட்களை நறுக்கி வைக்கவும்.
சமையலுக்கு அவசியம் தேவைப்படும் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சாஸ், தேங்காய்த் துருவல் மற்றும் விழுது, எலுமிச்சை சாறு போன்றவற்றை நேரம் கிடைக்கும்போது தயார் செய்து ப்ரிட்ஜ்ல் வைத்து இரண்டு நாட்கள் உபயோகிக்கலாம்.
புரதம் மிகுந்த பருப்பு , பீன்ஸ், பட்டாணி வகைகளை முன்பே தயாரித்து ப்ரிட்ஜ்ல் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
பொதுவாகவே சமைக்கும் நேரத்தை கண்காணித்தல் மற்றும் அதற்கேற்ப பாத்திரம், அடுப்பு கனல் ஆகியவற்றை தேர்வு செய்வது நேரத்தை மீதப்படுத்தும். அத்துடன் உணவை நீண்ட நேரம் சமைப்பது குளுக்கோஸை ஜீரணிக்கும் திறனையும் கிளைசெமிக் குறியீட்டையும் அதிகரிக்கிறது. இதனால் சுவையும் ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.
சமையல் உபகரணங்கள்
உங்களிடம் மைக்ரோவேவ் மற்றும் எலக்ட்ரிக் குக்கர், எலக்ட்ரிக் அடுப்பு போன்றவைகள் இருந்தால் அவற்றின் உபயோகத்தை அதிகப்படுத்தி விரைவாக சமைக்கலாம். மற்ற பணிகளில் மும்முரமாக இருக்கும்போது உணவு சமைக்க டைமருடன் கட் ஆஃப் இருக்கும் எலக்ட்ரிக் குக்கரைப் பயன்படுத்தலாம்.
பொருட்களை விரைவாக நறுக்க, துண்டுகளாக அல்லது கூழ்செய்ய உணவு பதப்படுத்தியைப் பயன்படுத்தலாம். வெட்டும் பலகைகள் மற்றும் பிற சமையல் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
காய்களை துருவ மற்றும் நறுக்கத் தேவையான கத்திகளை தரம் பிரித்து அதற்கான ஸ்டேண்ட்ல் வைத்து எடுக்கும் பழக்கம் தேவை. ஒரே கத்தியில் காய்கறிகள், இறைச்சி இரண்டுமே நறுக்குவதை விட இரண்டு கத்திகளை தனித்தனியே பயன்படுத்துங்கள். சைவ, அசைவம் என்று பிரித்து வைக்கும்போது கத்திகளை நீண்ட நாட்கள் உபயோகிக்க முடியும். இவற்றை வாங்கும்போது அதே பிராண்டுகளில் கிடைக்கும் ஷார்ப்னர்களையும் வாங்கிவிட வேண்டும். அது கத்தியின் ஆயுளை மேலும் அதிகரிக்கும்.
சமையல் மற்றும் சுத்தம் செய்யும் நேரத்தை குறைக்க "ஒன் பாட்" எனப்படும் முறையில் ஒற்றைப் பாத்திரத்தில் கலவை சாதம், சூப்கள், ரசம் போன்றவற்றை செய்யலாம். குறைந்த பாத்திரங்கள் சமையல் நேரத்தை மிச்சப்படுத்த எளிய வழி.
திட்டமிடல் மற்றும் செயல்
கடைசி நிமிட சமையலை கூடுமானவரை தவிர்க்கவும், தேவையற்ற சமையல் பரிசோதனையால் உணவு வீணாவதைக் குறைக்கவும். ஓய்வு நாட்களில் வாரத்திற்கான உணவைத் திட்டமிடுவது நல்லது.
சமையலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்ய ஒரு மளிகைப் பட்டியலை உருவாக்குங்கள். பட்டியலில் இல்லாதவற்றை முன்னரே வாங்கி வையுங்கள். இதனால் இறுதிநேர டென்ஷன் இதனால் குறையும்.
சமையல் நேரம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உங்கள் சமையலறையை ஒழுங்காகவும், தேவையான (துடைக்க உதவும் துண்டு முதல்) சமையல் சாதனங்களை எடுக்க ஏதுவாக அதற்குரிய இடங்களிலும் வைத்திருப்பது முக்கியமான டிப்ஸ்.
சமைக்கும் நேரம் ருசியான சமையல் முறைகளுக்கான சமையல் கலை நிபுணரிடம் செல்லும் தனிப்பயிற்சி மூலம் உங்கள் நேர மேலாண்மை திறன்களையும் சமையல் திறனையும் மேம்படுத்தலாம்.
முன்னேற்பாடுகள் சமையலை விரைந்து முடிக்க மட்டுமின்றி டென்ஷன் இன்றி மகிழ்வாகவும் சமைக்க உதவும்.