
இட்லி, தோசை மாவில் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால், மாவு சீக்கிரம் புளித்துப்போகாது.
பாகற்காயை கடையிலிருந்து வாங்கி வந்தவுடன் இரண்டாக நறுக்கி வைத்தால் இரண்டு நாட்கள் வரை பழுக்காமலிருக்கும்.
முட்டைக்கோஸை வேகவைக்கும்போது, சிறிது இஞ்சித்துருவலையும் சேர்த்து வேகவிட்டால் முட்டைக்கோஸின் பச்சை வாடை அறவே நீங்கிவிடும்.
ஆலு பரோட்டா செய்யும்போது பூரணம் வெளிவராமல் இருக்க, கிண்ணம் போல் மாவை வடிவமைத்து, ஆலுவை உள்ளே வைத்து, மாவை சுற்றி மூடி செய்ய பூரணம் வெளிவராது.
சீராக நறுக்கிய வாழைப்பூவை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால், வாழைப்பூ கறுக்காமல் இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரைக்கப் தேங்காய்ப் பால் ஊற்றிக்கிளறிய பின் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
மிளகாயை நீரில் வேகவைத்து வடிகட்டி, உலரவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சுவை மாறாமல் இருக்கும்.
சாதம் மீந்துவிட்டால் தண்ணிவிடாமல் ஃ ப்ரிட்ஜில் வைத்து, அடுத்த நாள் சாப்பாடு வைக்கும் பொழுது, அரிசிக்குத் தகுந்த தண்ணீர் வைத்து மீந்த சாதத்தையும் அதில் கலந்து வைத்தால் நன்றாக இருக்கும். இதனால் பழைய சாதமும் வீணாகாது.
சமையலறையில் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களை அடுப்பு பக்கத்தில் வைக்காமல், இருட்டான குளிர்ச்சியான இடத்தில்தான் வைக்கவேண்டும். உஷ்ணம், வெளிச்சம் சேர்ந்தால் மசாலாக்களின் வாசனையைக் கெடுத்துவிடும்.
ரவா, சேமியா, அவல் போன்ற எந்தக் கேசரி செய்தாலும், அதற்கு தண்ணீரோடு தேங்காய்ப்பால் சேர்த்தால் கேசரியின் சுவை கூடுவதோடு, இனிப்பும் திகட்டாமல் இருக்கும்.
உளுந்து வடை செய்யும்போது, கூடவே சிறிது பச்சரிசியையும் கலந்துகொண்டால் மெதுவடை மொறு மொறுவென இருக்கும்.
பிரட் துண்டுகள் காய்ந்து போய்விட்டால், தோசை சுடும்போது தோசையைத் திருப்பிப் போட்டு அதன் மேல் ஒரு நிமிடம் வைத்து எடுத்தால், அன்று வாங்கிய பிரட்போல் இருக்கும்.