

தோலுடன் கூடிய உளுந்தை ஊறவைத்து தோல் நீக்கி பயன் படுத்தினால் இட்லி பூ மாதிரி இருக்கும்.
நேந்திரங்காய் சிப்ஸ் செய்யும்போது சீவிய தோலைப் பொடியாக நறுக்கி, வேகவிட்டு தாளித்து வதக்கி, தேங்காய்த்துருவல் சேர்த்து சுவையான பொரியல் செய்யலாம்.
போளி செய்யும்போது பிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, அதனுள் வெல்லம், தேங்காய் கலந்த பூரணத்தை நிரப்பி, மீண்டும் மூடும்போது, அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால் போளி மிருதுவாக இருக்கும்.
இடியாப்பத்துக்கு மாவு பிசையும் போது, சிறிதளவு வெண்ணைய் அல்லது தேங்காய் எண்ணையைச் சேர்த்துக் கொண்டால், இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.
இனிப்பு வகைகள் செய்யும்போது கடைசியாக நெய் விடாமல் பாகுடன் நெய் விட்டால், நெய் நன்றாகக் கலந்து சுவை நன்றாக இருக்கும்.
வெண்பொங்கலில் மிளகு போடும் போது, முழுதாகப் போடாமல் ஒன்றிரண்டாக அரைத்துப் போட்டால் யாரும் சாப்பிடும்போது எடுத்துக்கீழே வைக்க மாட்டார்கள். அதே போல இஞ்சியைத் துருவிப்போட்டால் பொங்கலுடன் கலந்துவிடும்.
ஆரஞ்சுப்பழத்தோலை பொடியாக நறுக்கி உப்பு காரத்துடன் சுவையான ஊறுகாய் தயாரிக்கலாம்.
கொண்டைக்கடலையை ஊறவைத்து அவித்தால் சில சமயம் ஒருவித வாடை வரும். அதைத் தவிர்க்க கொண்டைக்கடலையை நன்றாகக் கழுவி ஊறவைத்தபின் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை என்று இரண்டு மூன்று முறை மறுபடியும் கழுவி தண்ணீரை மாற்ற வேண்டும்.
பீர்க்கங்காய் தோலை எண்ணெயில் வதக்கி வறுத்த பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, சிறிது புளி சேர்த்து சுவையான துவையல் செய்யலாம்.
சமையல் செய்யும்போது சூடுபட்டால், பீட்ரூட்டைப் பிழிந்து சாறு எடுத்துத் தடவினால் போதும், சீக்கிரம் குணமாகிவிடும்.
வெள்ளைப்பூசணிக்காயின் தோலைத் துண்டுகளாக்கி, உப்பு சேர்த்து, வெயிலில் உலர்த்தி வற்றல்போல பொரித்தெடுக்கலாம்.
ரவை மற்றும் பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு டைட்டாக மூடி ஃப்ரிட்ஜில் வைக்க, எத்தனை மாதமானாலும் வண்டு பிடிக்காது.