
காலிஃப்ளவரை வேகவைத்து துண்டுகளாக நறுக்கி, எலுமிச்சைச்சாற்றில் ஊறவைத்து பின்னர் கோபி மஞ்சூரியன் செய்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
மோர்க்குழம்பு செய்ய தேவையான அளவு மோர் இல்லையென்றால் புளிப்பான மூன்று தக்காளிகளை மோர்க்குழம்புக்கு தேவையான பொருட்களுடன் சேர்த்து அரைத்தால் புளிப்புச் சுவை வந்துவிடும்.
வெஜிடபிள் சாலட் செய்யும்போது நீர் அதிகமாகிவிட்டால் மூன்று, நான்கு பிரட் துண்டுகளை வறுத்துப்போடவும். சாலட் சரியாகி விடுவதுடன் மேலும் சுவையாக இருக்கும்.
மிகுந்து போன வாழைக்காய், உருளைக்கிழங்கு சிப்ஸை வீணாக்காமல் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து, பொரியலுக்குத் தூவினால் மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.
குக்கரில் பொருட்களை வேகவைக்கும்போது தேவையான விசில் சத்தம் வந்ததும், உடனே அடுப்பை அணைக்காமல், அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்த பின் அணைத்தால், பொருட்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன், குக்கரையும் வழக்கத்தை விட சீக்கிரமாக திறக்கலாம்.
அடைக்கு மாவு அரைக்கும்போது அரிசி, பருப்பு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு இவற்றுடன் வெங்காயத்துண்டுகளையும் சேர்த்து அரைத்து விடுங்கள். இதனால் அடை செய்யும்போது வட்ட வடிவம் கெடாமலும், மெலிதாகவும் வருவதோடு அடை மொறு மொறுவென்றும் இருக்கும்.
பனீரை சிறு துண்டுகளாக்கி, தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் சிவக்கும்படி வறுத்து எடுத்து பட்டாணி குருமாவில் சேர்த்தால் சூப்பர் டேஸ்ட் கிடைக்கும்.
முற்றின தேங்காயை பல்லு பல்லாக நறுக்கி நெய்யில் சிவக்க வறுத்து முந்திரிப்பருப்புக்கு பதிலாக பாயசத்தில் போடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
கொதிக்கும் நீரில் சுண்டல் கடலையைப் போட்டு, இரண்டு மணி நேரம் கழித்து வேகவைத்தால் எளிதில் வெந்துவிடும்.
தேங்காய் சாதம் செய்யும்போது, சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி செய்து கலந்தால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
டீத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே இரண்டு ஏலக்காயையும் பொடி செய்து அதில் கலந்து வைத்தால் டீ போடும்போது கமகம வாசனையுடன் இருக்கும்.
பஜ்ஜி செய்யும்போது ஒரு கரண்டி இட்லி மாவை, அதில் கலந்து செய்தால் பஜ்ஜி உப்பி சுவையாக இருக்கும்.