
காளான் (மஷ்ரூம்) பயன்படுத்தி, மட்டன் குழம்புக்கு இணையான வாசனை, மற்றும் சுவையுடன் சமைக்கப்படும் ஒரு அருமையான சைவ உணவு வகையாகும். இது சைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான சுவை வாய்ந்த குழம்பாகும்.
காளான் (மஷ்ரூம்) குழம்பு
தேவையான பொருட்கள்:
காளான் (மஷ்ரூம்) – 200 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
தக்காளி – 2 (நன்றாக அரைத்தது)
இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – ½ ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
கறி மசாலா – 1 ஸ்பூன்
சோம்பு – ½ ஸ்பூன்
கிராம்பு, இலவங்கப்பட்டை – தலா 2
செய்முறை: முதலில் காளானை நன்கு துடைத்து, துண்டுகள் போட்டு வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, கிராம்பு, இலவங்கப்பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்கு கிளறவும். காளான் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கறி மசாலா தூள் சேர்த்து கொதிக்கவிட்ட பிறகு, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சாதம், சப்பாத்தி, இடியாப்பம், இட்லி, தோசை, அப்பம் ஆகியவற்றுடன் அருமையாக சேரும். இது ஒரு உண்மையான சைவ ருசி கொண்டோர் மட்டுமல்ல, மற்றவர்களையும் கவரும் குழம்பு வகை!
பூசணிக்காய் தயிர் குழம்பு
இது ஒரு தென்னிந்திய பாரம்பரிய உணவு வகை. வெள்ளைப் பூசணிக்காயும் தயிரும் சேர்ந்து மிக நன்றாக செரிமானமாகவும் சத்தானதாகவும் இருக்கும். இதை செய்ய
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் – 1 கப் (தோல் சீவி துண்டுகளாக நறுக்கப்பட்டது)
தயிர் – 1 கப் (அரைத்துக் கலக்கி வைத்தது)
தேங்காய் துருவல் – ¼ கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சில
கொத்தமல்லி இலை – அலங்கரிக்க
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய் துண்டுகள், மஞ்சள் தூள், சிறிது உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக வேகவைக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். வெந்த பூசணிக்காயில் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும். இதில் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கலந்த தயிர் சேர்க்கவும். தயிர் சேர்த்த பிறகு குழம்பு கொதிக்கக்கூடாது. வெப்பத்தில் மட்டும் வேகவைக்க வேண்டும். இல்லையெனில் தயிர் உடைந்துவிடும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, கறிவேப்பிலையும் சேர்த்து குழம்பில் ஊற்றவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இது சாதத்துடன் மிக அருமையாக இருக்கும். உருளைக்கிழங்கு வறுவல் போன்ற பக்க உணவுகளுடன் சேர்த்து பரிமாறலாம்.