
வெந்தயத்தை வறுத்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு குழம்பு, காய்கறி வகைகளை சமைத்து இறக்கும்போது, சிறிதளவு தூவினால் மணம் பிரமாதமாக இருக்கும்.
காய்கறிகள், கீரை வேகும்போது அரை டீஸ்பூன் வெண்ணைய் சேர்த்துப் பாருங்கள். இதனால் காய்கறிகள், கீரை போன்றவற்றின் சத்தும், நிறமும் மாறாது.
பாகற்காய் வறுவல் செய்யும்போது, காயை எண்ணெயில் நன்றாக வறுத்து, பின்னர் உப்பு காரம் போட்டால் மொறு மொறுப்பு குறையாமல் இருக்கும்.
காலிஃப்ளவர் சமைக்கும்போது சிறிதளவு பால் சேர்த்தால், பூவிலிருந்த வெள்ளை நிறம் மாறாமலிருக்கும். பச்சை வாசனையும் வீசாது.
வெந்தயக் குழம்பு தயார் செய்து இறக்கும்போது, ஒரு டீஸ்பூன் எள்ளுப்பொடியைப் போட்டால், வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
வடைமாவு மிகுந்துவிட்டால், அதை குக்கரில் வேகவைத்து எடுத்து நன்றாக உதிர்க்கவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, உதிர்த்த கறிவேப்பிலையையும் சேர்த்துக்கிளறினால் சுவையான வெங்காய உசிலி தயார்.
கார பட்சணங்கள் தயாரிக்க மாவு பிசையும்போது, சிறிது தேங்காய் எண்ணெயும் சேர்த்துப் பிசைந்து பாருங்களேன். பட்சணங்கள் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
மீந்துபோன வாழை, உருளை சிப்ஸை வீணாக்க வேண்டாம். அதை மிக்ஸியில் கர கரப்பாக பொடித்து பொரியல் செய்யும் போது தூவலாம்.
கேரட்டை பூப்போலத் துருவி சிறிது உப்பு சேர்த்து அரைக்கப் தயிருடன், பச்சை மிளகாய், கொத்தமல்லி கலந்து சாப்பிட, சுவை பிரமாதமாக இருக்கும்.
காலையில் அரைத்த தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால், அத்துடன் புளித்த மோர் அல்லது தயிருடன் மஞ்சள் தூள் சேர்த்துத் தாளித்துக்கொட்டினால், மதியத்துக்கான மோர்க்குழம்பு ரெடி.
உருளைக்கிழங்கு, சேப் பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது,மேலாக சிறிது காய்ந்த ரொட்டித்தூளைத் தூவினால் ரோஸ்ட் கர கரப்பாகவும் ருசியாகவும் இருக்கும்.
பாயசம் நீர்க்க இருந்தால், அதில் வாழைப்பழத்தை பிசைந்து போட்டு, கொஞ்சம் தேனும் கலந்தால் சுவை யான கெட்டிப்பாயசம் தயாராகிவிடும்.