

பொதுவாக காய்கறிகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிப்பது சத்துக்களை இழக்க செய்யும் என்று சொல்லப்பட்டாலும், சில குறிப்பிட்ட காய்கறிகளுக்கு அவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும், சுவைக்கும் அவசியமாகிறது. அப்படி சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் அதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
சேனைக்கிழங்கு மற்றும் கருணைக்கிழங்கு:
இவைகளில் கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) படிகங்கள் உள்ளன. இவற்றை அப்படியே சமைத்தால் சாப்பிடும்போது தொண்டையிலும், நாக்கிலும் கடும் அரிப்பு அல்லது நமைச்சல் ஏற்படும். அதனால் இவற்றை நன்றாக கழுவி தோலுடன் கொய்யா இலை அல்லது புளிய இலை சேர்த்து வேகவைத்து தோல் உரித்து சமைக்கலாம்.
மரவள்ளிக்கிழங்கு:
இதில் இயற்கையாகவே மிகச்சிறிய அளவில் சயனோஜெனிக் கிளைகோஸைடுகள் (Cyanogenic glycosides) இருக்கலாம். இது ஒரு வகை நச்சுத்தன்மை கொண்டது. ஆதலால் தோலை நன்றாக சீவி, அதிக நீரில் வேகவைத்து நீரை வடித்தால் ,அந்த நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிவிடும் .அதன் பிறகு சமைக்கலாம்.
முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர்:
இவற்றில் பூச்சிகள் அல்லது கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் (Tape worms) இருக்க வாய்ப்புள்ளது. மேலும் இவற்றில் உள்ள சில கூட்டுப் பொருட்கள் சிலருக்கு வாய்வு தொல்லையை உண்டாக்கும். ஆதலால் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த கொதி நீரில் சில நிமிடங்கள் போட்டு எடுத்துவிட்டு, அந்த நீரை வடித்த பின் சமைப்பது கிருமி நீக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நல்லது.
பாகற்காய்:
இதன் அதிகப்படியான கசப்பு சிலருக்கு பிடிக்காது. அந்தக் கசப்பை குறைக்க விரும்புபவர்கள் உப்பு கலந்த நீரில் லேசாக வேகவைத்து நீரை வடித்து விட்டு சமைப்பார்கள். இதுபோல் சமைப்பதால் சத்துக்கள் குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆதலால் கசப்பு பிடிப்பவர்கள் இதை தவிர்த்து அப்படியே சமைத்து சாப்பிடலாம்.
கீரை வகைகள்:
குறிப்பிட்ட சில வகை தண்டு கீரைகளில் அக்சலேட்டுகள் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆதலால் லேசாக ஆவியில் வேகவைத்து அல்லது கொதி நீரில் போட்டு எடுத்தும் நீரை வடிப்பதன் மூலம் ஆக்ஸலேட் அளவைக் குறைக்கலாம்.
கவனிக்க வேண்டிய பொதுவான காரணங்கள்
யூரியா மட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகள்:
தற்போது விளையும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகமாக இருக்கலாம். கொதிநீரில் போட்டு எடுப்பது அதன் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களை நீக்க உதவும்.
செரிமானம்:
கிழங்கு வகைகளை வேகவைத்து நீரை வடிப்பதால் அவற்றில் உள்ள அதிகப்படியான ஸ்டார்ச் மட்டும் வாய்வு தன்மை குறைந்து செரிமானத்துக்கு எளிதாகும்.
முக்கியமாக, பெயர் சொன்னவை தவிர கேரட், பீன்ஸ் போன்றவற்றை அப்படியேதான் சமைக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த நீரில் உள்ள பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி வைட்டமின்கள்அப்படியே கிடைக்கும். சமயத்தில் அந்த தண்ணீரை வடிக்க வேண்டி வந்தால் அவற்றை சூப் அல்லது குழம்பில் சேர்ப்பது சிறந்தது.
இதுபோன்ற காரணங்களால்தான் நம் முன்னோர்கள் பல்வேறு காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடித்து விட்டு சமைக்கச் சொல்லி தருகிறார்கள். நாமும் சமைக்கும்பொழுது அவற்றை பின்பற்றி சமைப்போமாக!