

பச்சைப் புளி ரசம் என்பது மருத்துவ குணம் மிக்க ஒரு பிரபலமான தமிழ்நாட்டு துணை உணவாகும். பொதுவாக ரசம் என்பது ஜீரணத்திற்கு உதவும் ஒரு உணவாகும். திருமண விருந்து முதலான விசேஷங்களில் சாப்பிட்டு முடித்ததும் கடைசியில் ஒரு கப் ரசத்தை வாங்கிக் குடிப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ரசம் என்பது தமிழ்நாட்டிற்கே உரிய ஒரு சிறப்பான விஷயம். இது மருந்தாகவும் பயன்படுகிறது.
பலவிதமான ரசனைகளைப் போல ரசத்திலும் மிளகு ரசம், எலுமிச்சை ரசம், மைசூர் ரசம், தக்காளி ரசம் என பலவிதமான ரசங்கள் வழக்கத்தில் உள்ளன. ஆனால் பச்சை புளி ரசம் என்பது முற்றிலும் வித்தியாசமானது. அடுப்பே இல்லாமல் மிக்சியே இல்லாமல் இந்த ரசத்தை எளிதில் தயாரித்துவிட முடியும் என்பதுதான் இதன் சிறப்பு. இது ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதை எப்படித் தயாரிப்பது என்பதைப் பற்றி இப்போது சற்று பார்ப்போம்.
பச்சை புளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
புளி – ஒரு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பூண்டு – ஐந்து பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை எடுத்துக்கொண்டு அதை நன்றாக உருட்டி பின்னர் தண்ணீரில் நன்றாக கரைத்துக்கொண்டு சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி புளிக்கரைசலை ஒரு மண்சட்டியில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் முதலானவற்றை ஒவ்வொன்றாக ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து எடுத்து புளி கரைசலில் சேர்த்துக் கலக்கவேண்டும். தக்காளியை கையால் பிசைந்து அதை கரைசலில் சேர்த்து பின்னர் கொத்துமல்லித்தழை மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவேண்டும்.
அனைத்தையும் கலந்த பின்பு அதில் சிறிதளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூளைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இப்போது சுவையான மருத்துவ குணம் மிக்க வயிற்றைப் பாதுகாக்கும் பச்சை புளி ரசம் தயாராகி விட்டது.
அடுப்பு இல்லாமல் மிக்சி இல்லாமல் சமைப்பது என்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் அதை பதினைந்தே நிமிடங்களில் சமையலே தெரியாதவர்கள் கூட எளிதில் செய்துவிட முடியும் என்பது அடுத்த சிறப்பு.
விருந்து அல்லது ஓட்டல்களில் சாப்பிட்ட பின்னர் சிலருக்கு வயிற்றில் எரிச்சல் அல்லது அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம். அத்தகைய சமயங்களில் இதைத் தயாரித்துக் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.