
கைப்பிடி வெந்தயக் கீரையுடன் கோவைக்காய், வாழக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி இதனுடன் மைதா, பொட்டுக்கடலை மாவு, வினிகர், மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து இந்த மாவை கொதிக்கும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு பொரித்தெடுத்தால் சத்தான கலர் பக்கோடா தயார்.
ஒரு கப் ஓட்ஸுடன் ஊறவைத்த பாசிப்பருப்பு, சிறிதளவு வேர்க்கடலை, பச்சை பட்டாணி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய் போன்றவற்றினை நறுக்கி எண்ணெயில் நன்றாக வதக்கி கிச்சடி செய்தால் ருசியாக இருக்கும்.
பீன்ஸ், அவரைக்காய் போன்றவற்றை அவசரமாக சமைப்பதற்கு வேகவைக்கும்போது ஒரு துண்டு தக்காளி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்த விட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.
சாலட் வகைகளுக்கு அன்னாசிப்பழத்தை பயன்படுத்தும் பொழுது அதை துண்டுகளாக வெட்டி சர்க்கரை கலந்த நீரில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு எடுத்து பயன்படுத்தினால் வாசனையும் சுவையும் அசத்தலாக இருக்கும்.
புதினாவை நறுக்கிவிட்டு கழுவினால் அதில் உள்ளசத்து, வாசனைகள் குறைந்துவிடும். ஆதலால் அதை கழுவி விட்டுத் தான் நறுக்கவேண்டும். மல்லித்தழையை நறுக்கிவிட்டு கழுவினால் அதில் இருக்கும் மண் நீங்கி சுத்தமாக இருக்கும்.
சப்பாத்தி, பூரி போன்றவற்றை செய்ய முற்படும் பொழுது அவற்றை திரட்டி தயாராக வைத்துக்கொண்டு அடுப்பைப் பற்ற வைத்தால் சட்டென்று செய்துவிட்டு வியர்த்து வழியாமல் வெளியே வந்துவிடலாம். எரிபொருளும் வீணாகாது.
வாழைப்பூவை நறுக்கினால் கையில் கறைபடியும். அதற்கு வினிகர் கலந்த நீரில் கையை கழுவினால் கறை போயே போச்சு.
காய்கறி துருவியை கழுவும் முன்பு பழைய டூத் பிரஷ்ஷால் தேய்த்தால் அதில் உள்ள துகள்கள் எளிதில் நீங்கிவிடும். துருவி எப்பொழுதும் சுத்தமாகவே இருக்கும். ஆதலால் ஒரு புது பிரஷ் வாங்கி கிச்சனில் வைத்துக் கொள்வது இதுபோன்ற சுகாதார மேம்பாட்டிற்கு வசதியாக இருக்கும்.
மிகவும் சிறிய சைஸ் பூண்டுகளை உரிப்பதற்கு சிரமமாக இருக்கும். அவற்றை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து உரித்தால் எளிதாக உரித்து விடலாம். அவற்றை உடனடியாக சமைத்து விட்டால் காய்ந்துபோகாமல் இருக்கும்.
சமையலுக்கு தரமான எண்ணெயை பயன்படுத்தி சமைக்கும் பொழுது பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்குவதற்கு பதில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு அதன் பின்பு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெயை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் எண்ணெயிலிருந்து வெளியேறும் ரசாயனத் தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.
மோர் குழம்பிற்கு அரைக்கும்போது ஒரு சிறிய துண்டு இஞ்சி 2 ஸ்பூன் கடலை பருப்பு வைத்து அரைத்தால் புளிப்பும் சீக்கிரம் வராது. குழம்பு நீர்த்துப்போகாமலும் இருக்கும்.
உருளைக்கிழங்கை வறுப்பதற்குமுன் அதை சீவி தண்ணீரில் கழுவிவிட்டு பிறகு உப்பு தண்ணீரில் எலுமிச்சைசாறு சிறிதளவு கலந்து ஊறவைத்து நன்றாக மீண்டும் கழுவியபின் அதை எடுத்து வாணலியில் உலர்த்தி வறுத்தால் மொறு மொறு என்று சுவையாக இருக்கும். கலரும் வெள்ளையாக இருக்கும்.