
கோடைக்காலம் வந்துவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அடிக்கடி விரும்பி கேட்கும் பானம் ஜில்லுனு ஜூஸ்தான்.
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எளிமையான முறையில் ஜூஸ்களை தயாரித்துக் கொடுத்துவிடலாம். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். சுறுசுறுப்பு அடைவார்கள். முகம், உடல் தேஜஸ் பெறும். உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும். அதற்காக எளிமையாக செய்யக்கூடிய ஜூஸ் வகைகள் சில இதோ:
கேரட், பீட்ரூட், ஆப்பிள் இவற்றில் தலா ஒன்று எடுத்துக்கொண்டு தோல் சீவி துண்டங்கள் ஆக்கி மிக்சியில் போட்டு அடித்து சக்கைகளை வடிகட்டி விட்டு அப்படியே அருந்த வேண்டியதுதான்.
இந்த ஜூஸை அருந்துவதால் நல்ல செரிமானம் கிடைக்கும். நச்சுகளை அகற்றும். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சரும நலம் கிடைக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இந்த ஜூசில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடையை சமச்சீராக நிர்வகிப்பதற்கு சரியான ஜூஸும் இதுதான்.
கரும்பு ஜூஸ்:
வெயில் நேரங்களில் வெளியில் செல்லும்பொழுது கரும்பு ஜூஸ் அருந்தலாம். கரும்பு ஜூஸுடன் இஞ்சிச்சாறு, லெமன் பிழிந்து அருந்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். செரிமானத்திற்கு அதில் உள்ள பொட்டாசியம் உதவுகிறது. உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கி உடலில் படிந்துள்ள நச்சை அகற்றி, உடல் எடை குறைய வழி வகுக்கும். வைட்டமின் சி இதில் அதிகமாக இருப்பதால் தொண்டைப்புண் வயிற்றுப் புண் குணமாக உதவிபுரியும். உடல் எரிச்சலை சரி செய்து உடல் சூட்டை குறைக்கும் தன்மை கரும்பு ஜூஸுற்கு உண்டு.
தர்பூசணி ஜூஸ்:
தர்பூசணியின் விதைகளை நீக்கிவிட்டு அதன் சிவப்பு பகுதியை மிக்ஸியில் அடித்து அதனுடன் உப்பு மிளகுத்தூள் கலந்து ஜூஸாக பருகலாம்.
தர்பூசணியின் அலர்ஜி எதிர்ப்பு பண்பு புற்றுநோய் செல்களின் அதீத வளர்ச்சியை தடுக்க உதவுகிறது. அதனுடன் பெருங்குடல், புரோஸ்டேட், கருப்பை, மார்பகம், நுரையீரல் உள்ளிட்ட புற்றுநோய்களின் பரவுதலையும் தீவிரத்தையும் தர்பூசணி கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி உடற்பருமன் குறைப்பு, நோய் எதிர்ப்பு, எலும்பு மற்றும் தசைகளுக்கு வலிமை ,கல்லீரல் பாதுகாப்பு, நரம்புகளுக்கு ஊக்கம் என தர்பூசணியில் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
தக்காளி ஜூஸ்:
நன்றாக பழுத்த இரண்டு தக்காளி பழங்களை கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிதளவு சர்க்கரை உப்பு சேர்த்து அரைத்து தேவையான அளவு நீர் விட்டு குடித்தால் வயிறு நல்ல குளிர்ச்சி பெறும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைக்கோபீன் , உயர் ரத்த அழுத்தம், மற்றும் கொழுப்பை குறைக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
எலுமிச்சை ஜூஸ்:
எலுமிச்சை ஜூஸ் உடன் நன்னாரி சிரப் கலந்து ஊறவைத்த சப்ஜா விதையை சேர்த்து பருகலாம். உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். செரிமான மண்டலத்தையும் சீராக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி சத்தானது உடல் பருமனை சீராக வைக்க உதவுகிறது. இதயநோய், சர்க்கரை நோய், ரத்த சோகை முதலியவற்றை தடுக்கும் சக்தியும் எலுமிச்சைக்கு உண்டு.