
பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு என்பது பருப்பு வகையைச் சேர்ந்தத் தாவரம் ஆகும். இது பச்சைப்பயறு, சிறுபயறு எனவும் அழைப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பயிர் உடலுக்கு பல நன்மைகளைத் தரும் பொக்கிஷமாக கருதப்படுகிறது.
இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது, சருமப்பொலிவு தருகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முளைக்கட்டிய பாசிப்பயறு உடற்குறைப்பு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நம் சமையலில் கொழுக்கட்டை, பொங்கல், பாயசம், கூட்டு, கஞ்சி ஆகிய உணவுகளுக்கு பாசிப்பயறுதான் அடிப்படை.
தற்போது தாராளமாக கிடைக்கும் மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் சத்தான பாசிப்பருப்பு சேர்த்து இந்த வித்தியாசமான ரெசிபிகள் செய்து வீட்டினரை அசத்துங்கள்.
குச்சிக் கிழங்கு தோசை
தேவை;
குச்சிக் கிழங்கு எனப்படும் மரவள்ளிக்கிழங்கு - 1 மீடியம் சைஸ் இட்லி புழுங்கல் அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு- 5 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய் - 3 ஜீரகம் - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 2
கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
குச்சிக்கிழங்கின் மேலே உள்ள தோலை உரித்து மண் போக நன்றாக கழுவி சீவிக்கொள்ளவும் அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லி அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி ஒருமணி நேரம்போல ஊறவைத்து வடித்து வைக்கவும். இப்போது அரிசி பருப்புடன் தோல் சீவிய இஞ்சி, நறுக்கிய குச்சி கிழங்கு துண்டுகள், பச்சை மிளகாய் (அல்லது வரமிளகாய்), உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுக்கவும். (கிரைண்டரிலும் போடலாம். கிழங்கைத் தள்ளிவிட்டு அரைக்கவும்) அதிகம் நீர் சேர்க்க வேண்டாம்.
இதனுடன் சீரகம் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து சூடான தோசை கல்லில் பரவலாக ஊற்றி சிறிது எண்ணெய்விட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். மிதமான தீயில் நிதானமாக வேக வைத்து எடுத்தால் முறுகலாக கிடைக்கும். இதற்கு கெட்டியான தேங்காய் சட்டினி மிகவும் ருசியாக இருக்கும்.
சக்கரை வள்ளி கிழங்கு பொரியல் தேவை
சக்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு- 2 ஸ்பூன்
மஞ்சள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கு
கடுகு
எண்ணெய்
வற்றல் மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை- 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பாசிப்பருப்பைக் கழுவி குக்கரில் வெயிட் போடாமல் குழையாமல் வேகவைத்து வடிக்கவும். சக்கரை வள்ளி கிழங்கின் மேல் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்பொடி தேவையான அளவு சேர்த்து குழையாதவாறு வேகவைத்து வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பின்னர் வேகவைத்த பாசிப்பருப்புடன் வேகவைத்த கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக்கிளறி இறக்கவும்.
ஸ்வீட் வேண்டாம் என்பவர்கள் வெறுமனே சக்கரை வள்ளிக்கிழங்கு பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை தாளித்து தேங்காய் துருவல் கிள்ளி போட்ட மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.