
வெண்டைக்காய் வதக்கும்போது அரை டீஸ்பூன் உப்பு போட்டு வதக்கவும். வெண்டைக்காயின் வழவழப்பு தன்மை நீங்கிவிடும்.
நட்ஸ், பருப்புவகைகள், ரவை போன்றவற்றை வேக வைப்பதற்கு முன், பச்சை வாசனை போகும்வரை பொன்னிறமாக வறுத்தெடுத்த பிறகு வேகவைத்தால், செய்யும் உணவு ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
பாலைத்திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம். அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத்திரித்தால் பனீர் புளிக்காமல் இருக்கும்.
முருங்கைக்காய் சாம்பார் செய்யும்போது, காயை வேக வைக்கும்போதே இரண்டு துண்டு கேரட்டையும் நறுக்கி சேர்த்தால் சாம்பாரின் சுவையே தனிதான்.
எலுமிச்சைச்சாறு மற்றும் தண்ணீரை ஒரு பவுலில் கலந்து கொள்ளுங்கள். ஃ ப்ரூட்சாலட் செய்யும்போது, பழங்களை நறுக்கிய உடனே இந்தக் கலவையில் நனைத்து எடுத்தால், பழங்கள் நீண்ட நேரத்துக்கு கறுக்காமல் இருக்கும்.
சாம்பார் பொடியை அரைத்து, ஆறவிட்டு டப்பாவில் அடைக்கும் முன்னர் சிறிது விளக்கெண்ணைய்விட்டு கரண்டியால் பிசறி டப்பாவில் அடைத்துவைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
தயிர் சேர்த்து சப்பாத்தி மாவைப்பிசைந்தால், சப்பாத்தி வித்தியாசமான சுவையில் இருக்கும்.
வேர்க்கடலையை வறுத்துத்தூளாக்கி ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். கிரேவி வகைகள் சிறிது நீர்த்து இருக்கும்போது, இரண்டு மேஜைக்கரண்டி வேர்க்கடலைத்தூளைக் கலந்திட கிரேவி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.
பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிக அளவில் உரிக்க வேண்டியிருந்தால், கொதிக்கும் நீரில் அவற்றைப் போட்டு உடனே எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். பிறகு எடுத்து உரித்தால் சுலபமாக உரிக்க வரும்.
உடைத்த கடலை, தேங்காய், உப்பு, புளி போன்றவற்றை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்தெடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், தேவைப்படும் நேரங்களில் அந்த பவுடரை எடுத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால், சுவையான சட்னி ரெடி.
வறுத்துப்பொடி செய்த வெந்தயப்பொடியை ரசம் கொதிக்கும் போது தூவி இறக்கினால் ரசம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
ஒரு கப் புழுங்கலரிசியை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். தேங்காய்த் துருவல் தூவ வேண்டிய பொரியல்களில், தேங்காய்த் துருவலுக்குப் பதிலாக இந்த அரிசிப்பொடியைத் தூவினால் பொரியல் சுவையாக இருக்கும் என்று மட்டுமல்லாமல் நீண்ட நேரம் கெட்டுப்போகாமலும் இருக்கும்.