
புளித்த மோரில் பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய்த்துருவல், வெங்காயம், மைதா, உப்பு, கொத்து மல்லித்தழை போட்டுக்கரைத்து சுவையான போண்டா செய்யலாம்.
கோதுமை மாவுடன், ஊறுகாய் விழுதைப் பிசைந்து, சப்பாத்தி செய்து பாருங்களேன். சப்பாத்தி உப்பும், உறைப்புமாக அதிக ருசியுடன் இருக்கும்.
மூன்று பங்கு ரவா இட்லி மிக்ஸுடன், ஒரு பங்கு கடலை மாவு, ஒரு பங்கு தயிர், சிறிதளவு சமையல் சோடா சேர்த்து, அரைமணி நேரம் ஊற வைத்தபின் டோக்ளா செய்தால் சுவையான டோக்ளா ரெடி.
நூடுல்ஸ் செய்யும்போது தண்ணீருக்கு பதில் கொஞ்சம் தெளிவான ரசத்தை சேர்த்துப்பாருங்கள். நூடுல்ஸ் சுவை அள்ளும்.
அரைத்து விட சாம்பாருக்கு தேங்காய் இல்லையா? சாம்பார் பொடி தயாரிக்கும் சாமான்களுடன் கச கசாவையும், பச்சரிசியையும் தேங்காய் எண்ணெயில் வறுத்து அரையுங்கள். சாம்பார் வாசனை தேங்காய் இல்லாமலேயே ஊரைத்தூக்கும்.
அரிசியையும், பயத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, உப்பு, பெருங்காயம் போட்டு தோசை வார்த்தால் சுவையான, சத்தான தோசை தயார்.
நடுத்தரமாக உள்ள வெள்ளரிக்காயை பெரிய துண்டுக ளாக அரிந்து சாம்பார் வைத்துப்பாருங்கள். பரங்கிக்காய் சாம்பார் போலவே இருக்கும். அதிகம் புளி சேர்ப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
தாளித்து வைத்த பொரியலுடன், நான்கு பிரட் துண்டுகள், உப்பு, மிளகாய் போட்டுப்பிசைந்து சுவையான போண்டா செய்யலாம்.
சம்பா கோதுமை மாவில் உப்புமா செய்யும் போது கடைசியாக இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கி வைக்கவும். உப்புமா அதிக சுவையுடனும், மணமாகவும் இருக்கும்.
தோசைமாவு அரைக்க பச்சரிசியை ஊறப்போடும்போது, பச்சை தண்ணீர் ஊற்றாமல், வெந்நீரை ஊற்றி ஊறவைத்து தோசை மாவு அரைத்து தோசை வார்த்தால், தோசை மிருதுவாக, பட்டு பட்டாக இருக்கும்.
ஒரு கப் கெட்டி அவல், இரண்டு கப் அரிசி, சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்து, ஊறவைத்து, அரைத்து சுவையான செட் தோசை செய்யலாம்.
சேமியா, ஜவ்வரிசி, மற்றும் அரிசி பாயசம் தண்ணியாகிவிட்டால், வீட்டில் இருக்கும் ஓட்ஸ் சிறிது எடுத்து பாயசத்தில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள். பாயசம் கெட்டியாகிவிடும்.